Published : 15 Feb 2022 09:33 AM
Last Updated : 15 Feb 2022 09:33 AM

வானில் ஒளி வீச்சுடன் பறந்தது என்ன? - அதிகாலையில் பரபரப்படைந்த மக்கள்

ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூரில் மீனவர்கள் எடுத்த படம்.

ராமேசுவரம்: தமிழகத்தில் நேற்று அதிகாலை வானில் நீண்ட நேரமாக வெளிச்சம், ஒலி எழுப்பியவாறு பறந்த அடையாளம் தெரியாத பொருளால் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று காலை 6 மணியளவில் வானில் நீண்ட நேரமாக அடையாளம் தெரியாத பொருள் ஒன்று வெளிச்சம் எழுப்பியவாறு பறந்து கொண்டே இருந்தது. ராமேசுவரத்தில் கடலுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த மீனவர்கள், அதிகாலை நடைப்பயிற்சிக்குச் சென்றவர்கள், காய்கறி, பால் வாங்கச் சென்றவர்கள், வேலைக்குச் சென்றவர்கள் என பலர் வானில் இதைப் பார்த்து பரபரப்பு அடைந்தனர்.

சிலர் இதனை தங்கள் கைபேசியில் வீடியோவாகவும், புகைப்படங்களாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்தப் பதிவுகளுக்கு, இது ஒரு விண்கல், வேற்று கிரக விமானம் என்று பலவாறாகப் பின்னூட்டங்கள் இடப்பட்டன. இதனால் இந்த வீடியோக்களும், புகைப்படங்களும் வைரலாகின.

ராக்கெட் வெளிச்சம்

பின்னர் ஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோ விண்ணில் ஏவிய பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட்டின் வெளிச்சம்தான் இது என்பது தெரியவந்தது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் தலத்தில் இருந்து 3 செயற்கைக் கோள்களுடன், பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட்டை நேற்று அதிகாலை 5.55 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. விண்ணில் ஏவப்பட்ட இந்த ராக்கெட்டின் வெளிச்சத்தைதான் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் பார்த்துள்ளனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x