Published : 15 Feb 2022 11:24 AM
Last Updated : 15 Feb 2022 11:24 AM
தென்காசி, கடையநல்லூர் பகுதியில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், “உங்களுக்கு வேலை செய்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். பாஜக கோலோச்சிய பகுதி தென்காசி பகுதி. இந்த முறை தென்காசி நகராட்சியை பாஜக நிச்சயமாக கைப்பற்றும். அதற்கு பொதுமக்கள் துணை நிற்க வேண்டும். ஜாதி, மத பேதமற்ற, ஊழலற்ற, நேர்மையான நிர்வாகத்தை தர பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்” என்றார்.
கடையநல்லூரில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுகிறது. அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், எல்லா ஜாதி தலைவர்களும் ஒட்டுமொத்தமாக பாஜகவுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி வந்துள்ளனர். கடந்த, 45 ஆண்டுகளுக்கு மேலாக நான் எதிர்பார்த்த கனவு நனவாகி உள்ளதால் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து 60 ஆண்டுகள் ஆகப் போகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் பலம் 4 சதவீதம் கூட இல்லை. நீட் தேர்வை கொண்டுவந்தது திமுக, காங்கிரஸ் கூட்டணி அரசு. திமுக பொய் சொல்லி ஆட்சிக்கு வந்து, மக்களை ஏமாற்றுகிறது” என்றார்.
தென்காசியில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரனும் பிரச்சாரம் செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT