Published : 14 Feb 2022 07:28 PM
Last Updated : 14 Feb 2022 07:28 PM

தென்காசி அருகே 800 ஆண்டுகள் பழமையான பிற்கால பாண்டியர்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

மதுரை: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் நொச்சிக்குளம் கிராமத்தின் விவசாய விளை நிலத்தில் 800 ஆண்டுகள் பழமையான பிற்கால பாண்டியர் கல்வெட்டை மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி வரலாற்று பேராசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் வரலாற்று துறை உதவி பேராசிரியர்கள் முனைவர் சீ.ராஜகோபால், முனைவர் பிறையா, ஆகியோர் தலைமையிலான குழுவினர் தரையின் மேற்பரப்பில் பரவிக் கிடக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பழங்காலத்து கல்வெட்டுக்கள் தொடர்பாக கள ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் வரலாற்று துறை மாணவர் வீரமல்லைய்யா என்பவர் கொடுத்த தகவல் அடிப்படையில் கல்லூரியின் வரலாற்று துறை உதவி பேராசிரியர்கள் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் நொச்சிக்குளம் கிராமத்தில் கள ஆய்வு செய்தனர்.

அப்போது, ஓர் உருளை வடிவ கல் ஒன்று விவசாய நிலத்தில் பாதி புதைந்தும், பாதி வெளியே நீண்டும் இருப்பதை கண்டனர். இக்கல்வெட்டை நிலத்தின் சொந்தக்காரர் அப்பையா நாயக்கர் உதவியுடன் எடுத்தனர்.

இதுகுறித்து உதவி்பேராசிரியர்கள் ராஜகோபால், பிறையா கூறுகையில், ‘‘இக்கல்வெட்டு 5 அடி உயரமும் மேற்பகுதியில் அரை அடி அகலமும், கீழ்பகுதியில் ஒரு அடி அகலமும் கொண்டதாக உள்ளது. இந்த உருளை வடிவ கல்லானது ஒரு செவ்வக வடிவ கல்லின் மீது அமைந்திருக்கிறது. இந்தக் கல்வெட்டு தமிழ் வருடம் சய ஆண்டு இரண்டாம் பாண்டியர் காலத்தில் மன்னன் குலசேகர பாண்டியன் ஆட்சி காலத்தில் 1294 - 1295-வது வருடம் பொறிக்கப்பட்டுள்ளது.

இதில் கல்லக நாட்டு கீழ் பிடாகை காருலபயார் நல்லாண்டி கொடுத்த தான கல்வெட்டு எனும் வரிகள் காணப்படுகின்றன. இக்கல்வெட்டு 13-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. இக்கல்வெட்டில் 18 வரிகள் காணப்படுகின்றன. அதில் 13 வரிகள் தெளிவாகும் மீதமுள்ள ஐந்து வரிகள் தெளிவற்ற நிலையிலும் காணப்படுகின்றன. இந்தக் கல்வெட்டு முன்னால் தமிழக தொல்லியல் துறை உதவி இயக்குனர் சொ.சாந்தலிங்கம் துணையோடு படிக்கப்பட்டது. இத்தகைய வரலாற்றுப்பதிவுகள் மூலம் பல சமூக அரசியல் மற்றும் நன்கொடை தொடர்பான வரலாற்று பதிவுகள் அறிவதற்கு வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பொதுமக்களும், தன்னார்வ மாணவர்களும் கல்வெட்டு தொடர்பான மதிப்புமிக்க தகவல்களை அரசாங்கத்திற்கோ அல்லது ஆர்வமுள்ளவர்களுக்கோ கூறுவதால் உண்மையான வரலாற்று நிகழ்வுகளை மறுவரையரை செய்ய மிகவும் உதவியாக இருக்கும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x