Published : 14 Feb 2022 07:17 PM
Last Updated : 14 Feb 2022 07:17 PM
திருச்சி: ”சட்டப்பேரவையை முடக்குவோம் என்று பேசுவது, சர்வாதிகார மனப்பான்மை கொண்ட, ஜனநாயகத்தில் நம்பிக்கை அற்றவர்களின் குரல்” என்று சு.திருநாவுக்கரசர் எம்.பி. கூறினார். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லை என்று கூறி, அதற்கான காரணங்களையும் அவர் அடுக்கினார்.
திருச்சி மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் ஸ்ரீரங்கம் பகுதியில் போட்டியிடும் திமுக - காங்கிரஸ் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, பூ மார்க்கெட் பகுதியில் சு.திருநாவுக்கரசர் எம்.பி இன்று பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ”ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் ஆகியவற்றுக்கு இந்தியாவில் சாத்தியக் கூறு கிடையாது. பாஜக, ஆர்எஸ்எஸ் குறிப்பிடும் ஒரே நாடு என்பது இந்தியா அல்ல, அகண்ட பாரதம். இந்தியா, வங்கதேசம், மியான்மர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவை அடங்கிய பகுதியைத்தான் அந்தக் காலத்தில் இருந்தே ஆர்எஸ்எஸ் அகண்ட பாரதம் என்று கூறி வருகிறது. இந்தக் காலத்தில் இது சாத்தியமல்ல.
சீனாவின் அச்சுறுத்தல், பாகிஸ்தானின் ஊடுருவல் என இப்போதைய இந்தியாவைப் பாதுகாப்பதற்கே பெரும்பாடு பட வேண்டியுள்ளது. எனவே, அகண்ட பாரதம் என்பது நடைமுறை சாத்தியமற்றது. பல மொழிகள், பல்வேறு கலாச்சாரங்கள், பண்பாடு உள்ள இந்தியாவில் ஒரே மொழி எப்படி சாத்தியம்.
அதேபோல், பல மாநிலக் கட்சிகள் உள்ள இந்தியாவில் ஒரே தேர்தல் என்பதும் சாத்தியமல்ல. மாநிலத்தில் உள்ள ஆட்சியை பாஜகவே கவிழ்த்துவிடுகிறது. மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவையை முடக்கியுள்ளனர். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அதிக எம்எல்ஏக்களை பெற்றிருந்த நிலையில், சிலரை இழுத்து பாஜக ஆட்சியை அமைத்துவிட்டனர். இப்படி சில மாதங்களில் ஆட்சியைக் கவிழ்ந்தால் எஞ்சிய 4 ஆண்டுகளுக்கு ஆளுநரா ஆட்சி செய்வார்?
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் செலவு மிச்சமாகும் என்று கூறுவர். யோசிப்பதற்கும், யோசனையை வெளிப்படுத்துவதற்கும் நன்றாக இருக்கும். ஒருவேளை ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால் அனைத்துக் கட்சிகளை அழைத்து நடைமுறை சாத்தியங்கள், பின்விளைவுகள், ஆட்சி கவிழ்ந்தால் என்ன செய்வது, இடைக்காலத்தில் யார் ஆட்சி செய்வார் என்பன உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்து பேச வேண்டும். ஒரே இரவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்ததுபோல், நாடு முழுவதும் உள்ள மாநில ஆட்சிகளைக் கலைத்துவிடுவதாகவோ, ஒரே தேர்தல் என்றெல்லாமோ அறிவிக்க முடியாது.
திமுக ஆட்சிக்கு வந்து சில மாதங்களே ஆகியுள்ள நிலையில், சட்டப்பேரவையை முடக்குவோம் என்று பேசுவதெல்லாம் சர்வாதிகார மனப்பான்மை கொண்ட, ஜனநாயகத்தில் நம்பிக்கை அற்றவர்களின் குரல்.
10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்தபோது, சட்டப்பேரவை முடக்குமாறோ - ஆட்சியைக் கலைக்குமாறோ திமுக கோரியதில்லை. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில் சட்டப்பேரவையை முடக்குவோம் என்பது முடக்குவாதம், சரியான வாதமல்ல. தமிழ்நாட்டில் முடக்குவாதத்துக்கான வாய்ப்பே கிடையாது. நாட்டில் நெம்பர் 1 முதல்வராக மு.க.ஸ்டாலின் செயல்படுவதாக அனைவரும் பாராட்டுகின்றனர். இதுகுறித்து பாஜக தமிழ்நாடு தலைவர் கு.அண்ணாமலைக்குத் தெரியவில்லையெனில், அவர் திருவண்ணாமலையில் உயரத்தில் ஏறி நின்று பார்த்தால் தெரியும்” என்றார்.
வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் எம்.பி. சு.திருநாவுக்கரசர் பேசும்போது, ”தமிழ்நாட்டில் திமுக தலைமையில் நல்லாட்சி அமைந்ததையடுத்து, தற்போது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தல் நடத்தப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்த சில மாதங்களே ஆகியுள்ள நிலையில், மக்களுக்கு சுகாதாரம், குடிநீர், சாலை உட்பட பல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளனர். குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்துக்காக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் அவசரப்பட்டு விமர்சனம் செய்கின்றன. இந்தத் தேர்தலில் திமுக- கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT