Published : 14 Feb 2022 06:17 PM
Last Updated : 14 Feb 2022 06:17 PM
கோவை: கோவையை கலவர பூமியாக்க திமுகவினர் முயற்சிப்பதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டியுள்ளார்.
கோவை மாநகர், கோவைப்புதூரில் திமுக பிரமுகர்கள் வாகனத்தை சிறைபிடித்த, அதிமுக செய்தித் தொடர்பாளா் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட அதிமுகவினர் 10 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குனியமுத்தூர் காவல்துறையினர் இன்று (பிப்.14) கைது செய்தனர். இதைக் கண்டித்து, அதிமுக கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள், மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஜி.எஸ்.சமீரன் மற்றும் மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் ஆகியோரை இன்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில்,‘ கோவையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அமைதியான முறையில் நடக்க வழிவகை செய்ய வேண்டும்,’’ என வலியுறுத்தப்பட்டு இருந்தது.
ரவுடிகள் இறக்குமதி: பின்னர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியது: ”திமுகவைச் சேர்ந்தவர்கள் கோவையை கலவர பூமியாக மாற்ற முயற்சிக்கின்றனர். சென்னை, கரூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ரவுடிகளை கொண்டு வந்துள்ளனர். சிறையில் இருந்து நிறைய பேரை விடுவித்துள்ளனர். இவர்களையெல்லாம், கோவைக்கு கொண்டு வந்து, ஒவ்வொரு வார்டுக்கும் ஆட்களை நியமித்து இங்கிருக்கும், பொதுமக்கள், மாற்றுக்கட்சியினரை தாக்குகின்றனர். தேர்தல் விதிகளை மீறி, 150 கண்டெய்னர்களில் பரிசுப் பொருட்களை கொண்டு வந்து, வெளிப்படையாக எல்லா இடத்திலும் விநியோகிக்கின்றனர். கோவை மாவட்டம் எப்போதும் அமைதியானது. 20 வருடங்களுக்கு முன்னர் இருந்த, பிரச்சினைகள் எல்லாம் முடிந்து தற்போது அமைதியாக சென்று கொண்டிருக்கிறது.
இதை கெடுக்கும் வகையில், வெளியூர்களில் இருந்து வந்த ஆட்கள், இங்குள்ள மக்களையும், மாற்றுக் கட்சியினரையும் தாக்கி மோசமான சூழலை உருவாக்குகின்றனர். திமுக அரசு இதுபோன்ற மோசமான செயலை செய்கிறது. நீதிமன்றத்தின் தேர்தல் வழிமுறைகளை மீறி திமுகவினர் செயல்படுகின்றனர். காவல்துறையினர் திமுகவினருக்கு உடந்தையாக இருக்கின்றனர். வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்களை திமுகவினர் விநியோகிக்க காவல்துறையினரே உதவுகின்றனர். அரசு அதிகாரிகள் அதிமுகவினரை ‘டார்ச்சர்’ செய்கின்றனர். ஆனால், திமுகவினருக்கு உதவுகின்றனர். இது ஒரு மோசமான சூழல்.
இங்குள்ள வெளியூரைச் சேர்ந்த ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும். அதிமுகவினரை கைது செய்து, ‘டார்ச்சர்’ செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பூத் சிலிப் ஆளுங்கட்சியினர் விநியோகிக்கின்றனர். இதுபோல் செயல்பட்டதால், சென்னையில் ஒரு முறை மாநகராட்சி தேர்தலை நீதிமன்றம் ரத்து செய்தது. தற்போது கோவையில் இதைவிட மோசமான சூழ்நிலையை உருவாக்குகிறார்கள்.
கோவை உட்பட தமிழகம் முழுவதும் 9 மாத ஆட்சியில் திமுக எதுவும் செய்யவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் தான் கோவையில் நடக்கிறது. தோல்வி பயத்தால் திமுக இவ்வளவு மோசமான செயலை செய்கிறது. எங்கள் கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், எங்கள் கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம். ஆளுநர், டிஜிபியிடமும் புகார் அளிப்போம்” இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வின்போது, அதிமுக எம்.எல்.ஏக்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுணன், ஏ.கே.செல்வராஜ், கே.ஆர்.ஜெயராம் உள்ளிட்டோர் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT