Published : 14 Feb 2022 05:50 PM
Last Updated : 14 Feb 2022 05:50 PM

மதுரை: 41-வது முறையாக கரோனா நிதிக்கு ரூ.10,000 வழங்கிய யாசகர்!

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: மதுரையில் யாசகர் பூல்பாண்டியன் கரோனா பேரிடர் நிதிக்கு, மாவட்ட ஆட்சியருக்கு 41-வது முறையாக 10,000 ரூபாயை நிவாரணமாக வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த பூல்பாண்டியன். இவர் ஒரு யாசகர். தான் யாசகமாக பெறும் பணத்தை சேமித்து தனக்கென்று செலவழிக்காமல் அப்பணத்தை பொது நிவாரணங்களுக்கு உதவியாக வழங்கி வருகிறார். கரோனா தொற்று காலத்தில், தனது சேமிப்பிலிருந்து ரூ.10,000-ஐ பலமுறை மதுரை மாவட்ட ஆட்சியருக்கு நிவாரணமாக வழங்கி வந்தார். தனது சேவை காரணமாக பொதுமக்களால் யாசகர் பூல்பாண்டியன் பாராட்டப்பட்டு வந்தார்.

இந்த நிலையில், 41-வது முறையாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் 10,000 ரூபாயை கரோனா நிவாரண நிதியாக பூல்பாண்டியன் வழங்கி இருக்கிறார். ஆக, இதுவரை ரூ.4 லட்சத்து 10,000 தொகையை நிவாரண நிதியாக வழங்கியிருக்கிறார்.

தன்னைப் போல் யாரும் யாசகம் பெற வேண்டாம்: 2020-ஆம் ஆண்டு இந்து தமிழ் திசை, இணையத்துக்கு பூல்பாண்டியன் அளித்த பேட்டியில், ‘‘எனக்கு யாசகம் மட்டுமே கேட்கத் தெரியும், ஆனால் யாசகம் கொடுக்கத் தெரியாது என்பதால் ஏழைகளுக்கு உதவி சென்றடையும் என்பதால் அரசிடம் கரோனா நிதி வழங்குகி வருகிறேன். என்னைப் போல யாசகம் பெறும் பழக்கத்தை மற்றவர்கள் தவிர்க்க வேண்டும். உழைத்து மட்டுமே உண்ண வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். எனக்கு பணத்தின் மீது ஆசை இல்லாத காரணத்தால் நான் யாசகம் பெறும் பணத்தை உதவிக்காக வழங்குகிறேன்’’ என்று தெரிவித்திருந்தார்.

இவர் தாம் யாசகர் பெறும் சிறு சிறு தொகையை மருந்து கடை நண்பர் ஒருவரிடம் சேமித்து வருவார். ரூ.10,000 சேர்ந்தவுடன் அந்தத் தொகையை நிவாரண நிதிக்கு அளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x