Published : 14 Feb 2022 03:44 PM
Last Updated : 14 Feb 2022 03:44 PM

மருத்துவக் கல்லூரிகளில் பிப்.18 வரை மாணவர்கள் சேரலாம்: மருத்துவக் கல்வி இயக்குநர்

வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கையையொட்டி, சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. படம்: வி.எம்.மணிநாதன்.

சென்னை: மருத்துவப் படிப்புகளில் சேர முதல் சுற்றில் சேர்க்கை ஆணை பெற்ற மாணவர்கள் வரும் பிப்.18-ம் தேதி வரை சேர்ந்து கொள்ளலாம் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு கூறியுள்ளார்.

முதலாம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இன்று முதல் ஆரம்ப வகுப்புகள் மட்டும் தொடங்கியுள்ளது. அதாவது, இந்த ஒரு வாரம் அறிமுக வகுப்புகள், தடுப்பூசி செலுத்துவது, கரோனா தடுப்பூசி, ஹெபாடைடஸ் 'பி' தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்டவை குறித்து மட்டுமே நடைபெறும். எனவே முதல் நாளில் வகுப்பில் சேர முடியாதவர்கள் அச்சப்படத் தேவையில்லை. பிப்.14-ம் தேதி என்பது கல்லூரி தயார் நிலையில் இருப்பது மட்டுமே, கல்லூரியில் அனுமதிப்பதற்கான கடைசி நாள் கிடையாது.

அடுத்தது இரண்டாவது கலந்தாய்வு உள்ளது, Mop up கலந்தாய்வு உள்ளது. இந்த கலந்தாய்வுகள் என்பது ஏப்ரல் முதல் வாரம் வரை இந்த நடைமுறைகள் சென்று கொண்டிருக்கும். எனவே மாணவர்கள் அச்சமடைய வேண்டாம். தாராளமாக பிப்.18-ம் தேதி வரை, இந்த முதல் சுற்றில் அதாவது 11-ம் தேதி சேர்க்கை ஆணை பெற்றவர்கள் வெள்ளிக்கிழமை வரை வந்து கல்லூரிகளில் சேர்ந்து கொள்ளலாம்.

கல்லூரி வரும் மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு அனுமதிக்கப்படுவர். இன்று முதல் வகுப்புகள் தொடங்கியுள்ளது. சிலர், அவசர காரணம், போக்குவரத்து பிரச்சினை உள்ளிட்ட காரணங்களுக்காக கால அவகாசம் தேவைப்படுகிறது. அதுபோன்ற மாணவர்கள், முதலில் வந்து, தங்களது சேர்க்கையை உறுதி செய்துகொள்ள வேண்டும். பின்னர் அவர்களுக்கு சில நாட்கள் விடுமுறை தேவைப்பட்டால் அனுமதி வழங்கப்படும். எனவே மாணவர்கள் தங்கள் இடங்களை உறுதி செய்ய வேண்டும். எந்தெந்த மாணவர்கள் சேரவில்லையோ, அந்த இடங்கள் இரண்டாவது சுற்றுக்குச் செல்லும்" என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x