Published : 14 Feb 2022 02:44 PM
Last Updated : 14 Feb 2022 02:44 PM

குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை விண்ணப்பம் வெளியீடா?- அரசு தெளிவுபடுத்த அன்புமணி வலியுறுத்தல்

கோப்புப் படம்

சென்னை: அரசு சார்பில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை விண்ணப்பம் என்ற பெயரில் முதல்வர் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டுகிறது அது உண்மையா, போலியா என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

"தமிழக அரசின் சார்பில் குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1,000 உரிமைத் தொகை விண்ணப்பம் என்ற பெயரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. அவை அரசு விண்ணப்பமாகத் தெரியவில்லை.

குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை வழங்கும் திட்டம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை; பயனாளிகள் தேர்வுக்கான வழிமுறைகள் அறிவிக்கப்படவில்லை; விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

இத்தகைய சூழலில் பொதுமக்களுக்கு ஒரு தரப்பினர் விண்ணப்பத்தை வினியோகித்து வருகின்றனர். அதன் பின்னணியில் முறைகேடு செய்யும் நோக்கம் இருக்கலாம். இந்த மோசடிக்கு முதல்வரின் பெயர் பயன்படுத்தக்கூடாது; விண்ணப்ப வினியோகத்தை தடுக்க வேண்டும்!

குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை விண்ணப்பம் வினியோகிக்கப்படுவது அரசுக்கு தெரியுமா? அவை உண்மையா, போலியா? என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும். மோசடியாக வினியோகிப்பவர்களை கைது செய்ய வேண்டும்!"

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x