Published : 14 Feb 2022 08:24 AM
Last Updated : 14 Feb 2022 08:24 AM
ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பண்ணாரி - திம்பம்சாலையில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வாகனப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் தடைக்கு சத்தியமங்கலம், தாளவாடி சுற்றுவாட்டார மலைக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 1400 சதுரகிலோமீட்டர் பரப்பளவில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு புலிகள் காப்பகமாக வரையறுக்கப்பட்ட வனப்பகுதியின் மையத்தில் 28 கிராமங்களும், எல்லையோரங்களில் 272 கிராமங்களும் அமைந்துள்ளன.
இந்த கிராமங்களில் வசிக்கும்மக்கள் தங்களின் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் விளை பொருட்களை விற்பனை செய்தல் உள்ளிட்ட தேவைகளுக்காக, திம்பம் - பண்ணாரி சாலையில் பயணித்து சத்தியமங்கலம் வர வேண்டியுள்ளது. மேலும், தமிழகம் - கர்நாடகாவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையாகவும் இந்த சாலை விளங்குவதால், 24 மணி நேரமும் வாகனப் போக்குவரத்து இருந்து வந்தது.
இந்நிலையில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பகுதியில் வசிக்கும் வனவிலங்குகள் வாகனங்களில் அடிபட்டு இறப்பதைத் தடுக்கவும், அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாக்கும் வகையிலும், பண்ணாரி - திம்பம் இடையேயான மலைப்பாதையில் மாலை 6 மணிமுதல் காலை 6 மணி வரை வாகனப்போக்குவரத்தை நிறுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 10-ம் தேதி முதல் இரவு நேர போக்குவரத்து நிறுத்தப்பட்டதுடன், பகலில் இந்த சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு திடீரென அமலுக்கு வந்ததால், தமிழகம் - கர்நாடகா இடையேயான போக்குவரத்தும், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. பண்ணாரியிலும் மறுபுறம் ஆசனூரிலும் இரவு முழுவதும் காத்திருக்கும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் காலை 6 மணிக்கு திம்பம் சாலையில் அனுமதிக்கப்படுவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால், மாணவர்கள், ஆம்புலன்ஸ்கள் இயக்கம், காய்கறி, பால் போன்றவற்றை எடுத்துச்செல்லும் வாகனங்கள் பாதிக்கப்பட்டன.
தடையை நீக்க வலியுறுத்தி அனைத்துக் கட்சிகள் மற்றும் வியாபாரிகள் உள்ளிட்ட அமைப்பினர் கூட்டமைப்பு ஏற்படுத்தி போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். கூட்டமைப்பின் தலைவரான முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம் கூறியதாவது;
மக்களின் நலன், அவர்களின் வாழ்வாதாரம் இவற்றைக் கருத்தில் கொள்ளாமல், வனவிலங்கு பாதுகாப்பை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு நேர போக்குவரத்துத் தடையின் காரணமாக, காலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், தாளவாடியைச் சுற்றியுள்ள 10 ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. தமிழக முதல்வர் இப்பிரச்சினையில் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் என்றார்.
மலைக்கிராம மக்கள் எதிர்ப்பு
இப்பிரச்சினை குறித்து தாளவாடி, சத்தியமங்கலம் பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
பண்ணாரி - திம்பம் சாலையில், பண்ணாரியில் இருந்து 3 கி.மீ. தூரம்மற்றும் திம்பம் காரப்பள்ளம் இடையேயான 7 கி.மீ. தூரம் ஆகிய இடங்களில்தான் வாகனங்கள் வேகமாகச் செல்ல முடியும். இந்த பகுதியில் கூடுதலாக வேகத்தடைகளை அமைக்கலாம். வனவிலங்குகள் சாலையைக் கடக்கும் பகுதிகளைக் கண்டறிந்து, அங்கு வனவிலங்குகளுக்கு பாதிப்பில்லாமல், உயர்மட்ட சாலை அமைக்கலாம். இரவு நேரங்களில் வனத்துறை வாகனத்தின் துணையோடு, மிகக்குறைந்த வேகத்தில் வாகனங்கள் இந்த பகுதியை கடக்க ஏற்பாடு செய்யலாம்.
இதைவிடுத்து ஒட்டுமொத்தமாக இரவு நேரத்தடை என்பது, தாளவாடி ஒன்றியத்தில் உள்ள 10 ஊராட்சிகளில் வசிக்கும் 75 ஆயிரம் பொதுமக்களின் அன்றாட வாழ்வில் பாதிப்பைஏற்படுத்தும். குறிப்பாக இரவில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் ஒரேசமயத்தில் காலையில் புறப்படும்போது, கிராமமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு கூட சாலையைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். இதற்கு தமிழக முதல்வர் தீர்வு காண வேண்டும் என்றனர்.
காடு என்பது வனவிலங்குகளின் வீடு ... சுற்றுச்சூழல் ஆய்வாளர் ஓசை காளிதாசன் கூறியதாவது: தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் கனரக வாகனங்கள் சுங்க வசூலைத் தவிர்ப்பதற்காக, பண்ணாரி - திம்பம் சாலையைப் பயன்படுத்துகின்றன. இந்த வாகனங்களைத் தடை செய்வது வனவிலங்குகளுக்கு மட்டுமல்லாது, உள்ளூர் மக்களுக்கும் பலன் தரும். இந்த சாலையில் வாகனங்களின் வேகத்தை குறைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளூர் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகளைக் குறைக்கலாம். கேரளா - தமிழகம் - கர்நாடகாவை இணைக்கும் கூடலூர் - வயநாடு-பந்திப்பூர் சாலைகளில் வனவிலங்குகளின் நலன் கருதி இரவு நேர போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இதற்கும் எதிர்ப்பு எழுந்தது. அதன் பின்னர் தற்போது வரை வெற்றிகரமாக தடை தொடர்கிறது. அதேபோல், இங்கும் வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும். இரவு நேரங்களில் வனப்பகுதியில் ஒரு இடத்தில் இருந்து, மற்றொரு இடத்துக்கு வனவிலங்குகள் இடம்பெயர்ந்து செல்ல இந்த போக்குவரத்துத் தடை உதவியாக உள்ளது. காடு என்பது வனவிலங்குகளின் வீடு. குறைந்தபட்சம் இரவு நேரத்திலாவது அதனை சுதந்திரமாக அதனுடைய வீட்டில் இருக்க அனுமதிக்க இந்த தடை அவசியமானது என்றார். |
27 கொண்டை ஊசி வளைவுகள் பண்ணாரி - திம்பம் மலைப்பாதையானது 27 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டதாகும். தமிழகம் - கர்நாடகாவை இணைக்கும் இந்த சாலையில் கடந்த 15 ஆண்டுகளில் கனரக வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்துள்ளது. நான்கு வழிச்சாலையில் பயணிக்கும் போது பெரும் தொகையை சுங்கக் கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளதால் சரக்கு வாகனங்கள் இந்த பாதையை பயன்படுத்தத் தொடங்கின. அதிக பாரம் ஏற்றி வருதல், வாகனப்பழுது, விபத்து போன்ற காரணங்களால், இந்த வாகனங்கள் திம்பம் சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வந்தன. இவற்றிற்கு தீர்வு காணும் வகையிலும், வனவிலங்குகள் நலன் கருதியும் கடந்த 2019-ம் ஆண்டு திம்பம் சாலையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பின்னர், பொதுமக்களிடம் இருந்து எதிர்ப்பு வந்ததால், இந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. தற்போது சென்னை உயர் நிதிமன்ற உத்தரவுப்படி இந்த தடை மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT