Published : 14 Feb 2022 11:57 AM
Last Updated : 14 Feb 2022 11:57 AM

‘சர்வதேச தரம்’ வாய்ந்த ஹாக்கி மைதானத்தின் பரிதாபம்; ரசிகர்கள் அமர கேலரி இல்லை, விளக்குகளுக்கு மின் இணைப்பு இல்லை: வீரர்கள் உடைமாற்றும் அறை, தண்ணீர் வசதியும் செய்து தர வலியுறுத்தல்

கோவில்பட்டி

கோவில்பட்டியில் ‘சர்வதேச தரத்தில்’ அமைக்கப்பட்டுள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் நிரந்தர கேலரி, தண்ணீர் வசதி, உடை மாற்றும் அறை, மின் இணைப்பு வசதி செய்து தர வேண்டும் என, ஹாக்கி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கோவில்பட்டியில் கடந்த 2017-ம்ஆண்டு கிருஷ்ணா நகரில் ரூ.7 கோடிமதிப்பில் சர்வதேச தரத்தில் செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானம்அமைக்கப்பட்டது. அத்துடன் சிறப்புவிளையாட்டு விடுதியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் ஆண்டுதோறும் கே.ஆர்.அறக்கட்டளை சார்பில் இந்திய அளவிலான ஹாக்கி போட்டி, மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படுகின்றன. கடந்த ஆண்டு தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டி நடந்தது. இந்தாண்டு 12-வது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டிகள் மே 18 முதல் 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த மைதானத்தின் மேல்புறம் 5 அடுக்குகள் கொண்ட கேலரி உள்ளது.ஆனால், மற்ற இடங்களில் கேலரிகள்கிடையாது. போட்டிகள் நடைபெறும்போது, தனியாக செலவு செய்து தற்காலிக கேலரிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மைதானத்தைச் சுற்றி 4 உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கு மின் இணைப்பு இல்லாததால் பகல், இரவு ஆட்டங்கள் நடக்கும்போது, மின்வாரியத்துக்கு முன்பணம் செலுத்தி, தற்காலிகமாக மின்வயர் இழுத்து மின் இணைப்பு கொடுக்கப்படுகிறது.

சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவில்பட்டி செயற்கை புல்வெளிஹாக்கி மைதானத்தில் ரசிகர்கள் அமர்ந்து பார்ப்பதற்கு நிரந்தர கேலரி அமைக்க வேண்டும். உயர்கோபுர மின் விளக்குகளுக்கு நிரந்தர மின் இணைப்பு வழங்க வேண்டும் என, ஹாக்கி ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூடுதல் ஆழ்துளை கிணறு

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி கழக செயலாளர் சி.குருசித்ர சண்முக பாரதி கூறும்போது, “கோவில்பட்டி ஹாக்கி மைதானத்தைச் சுற்றி ரசிகர்கள் அமர்ந்து போட்டிகளை காண நிரந்தர கேலரி அமைக்க வேண்டும். கேலரிக்கு கீழ் பகுதியில் விளையாட்டு வீரர்கள் உடை மாற்றவும், ஓய்வு எடுக்கவும் அறைகள் அமைக்க வேண்டும். மைதானத்தை சுற்றி கேலரிகள் அமைத்தால் குப்பைகள், தூசிகள் உள்ளே வருவது தடுக்கப்படும். இதனால் செயற்கை புல்வெளி பாதுகாக்கப்படும்.

செயற்கை புல்வெளி மைதானத்தை பொறுத்தவரை தண்ணீர் மிகவும் முக்கியம். இங்குள்ள மைதானத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் 8 கன்கள் பொருத்தப்பட்டுள்ளன. விளையாட்டின் தொடக்கம், இடைவெளி ஆகிய நேரங்களில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படும். இதற்காக ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டி கட்டப்பட்டுள்ளது. ஆனால், தண்ணீர் வழங்க ஒரே ஒரு ஆழ்துளை கிணறு தான் உள்ளது. ஒரு போட்டிக்கு 30 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவை. கூடுதலாக ஆழ்துளை கிணறுகளும், மேலும், 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டியும் அமைக்க வேண்டும்.

உயர்கோபுர மின் விளக்குகளுக்கு இணைப்பு இல்லாததால், போட்டிகள் நடத்தப்படும் போது மின்வாரியத்துக்கு ரூ.5 லட்சம் முன்பணம் செலுத்தி தனியாக மின் இணைப்பு பெற வேண்டும். இல்லையென்றால் ஜெனரேட்டர் மூலம் மின் இணைப்பு கொடுக்க வேண்டும். நிரந்தர மின் இணைப்பு என்பது இங்கு அவசியமானதாக உள்ளது.

பள்ளி விளையாட்டு விடுதி

தமிழகத்திலேயே கோவில்பட்டியில் தான் கல்லூரி மாணவர்களுக்கான ஹாக்கி சிறப்பு விளையாட்டு விடுதி உள்ளது. தற்போது கோவில்பட்டி வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மற்றொரு சர்வதேச தரம் வாய்ந்தசெயற்கை புல்வெளி ஹாக்கி மைதானம்அமைப்பதற்கான முயற்சிகள் நடந்துவருகின்றன. அதில், பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு விடுதி அமைக்க வேண்டும்” என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x