Published : 14 Feb 2022 09:53 AM
Last Updated : 14 Feb 2022 09:53 AM

வேலூர் மாநகராட்சியில் 60 வார்டுகளிலும் பூத் சிலிப் வழங்கும் பணி 2 நாட்களில் நிறைவு பெறும்: தேர்தல் அதிகாரிகள் அறிவிப்பு

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பூத் சிலிப் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று தொடங்கி வைத்தார்.

வேலூர்

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பூத் சிலிப் வழங்கும் பணிகள் 2 நாட்களில் நிறைவு பெறும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடை பெறுகிறது. வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் விறு, விறுப்பாக நடைபெற்று வருகிறது. வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 1-வது மண்டலத்துக்கு உட்பட்ட 7-வது வார்டில் திமுக வேட்பாளர் சுனில்குமார், 8-வது வார்டு திமுக வேட்பாளர் புஷ்பலதாவன்னியராஜா ஆகியோர் தேர்தலில் போட்டியிடாமலேயே வெற்றிபெற்றுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, மீதமுள்ள 58 வார்டுகளில் வரும் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதிமுக, திமுக உள்பட 354 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

வேலூர் மாநகராட்சியில் 1 லட் சத்து 99 ஆயிரத்து 208 ஆண் வாக்காளர்களும், 2 லட்சத்து 15 ஆயிரத்து 01 பெண் வாக்காளர்களும், 46 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 4 லட்சத்து 14 ஆயிரத்து 255 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

வாக்காளர்கள், வாக்களிக்க தேவையான பூத் சிலீப் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் மாநகராட்சி உள்ள அனைத்து வார்டுகளிலும் நேற்று காலை மாநகராட்சி ஊழியர்கள் வீடு, வீடாக சென்று பூத் சிலிப் விநியோகம் செய்தனர். மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பூத் சிலிப் வழங்கும் பணியை நேற்று தொடங்கி வைத்தார்.

வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை சரிபார்த்து பூத் சிலிப் வழங்கும் பணிகளை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். பூத் சிலிப்பில் வாக்காளர் விவரம் எண், வாக்கு அளிக்க உள்ள வாக்குச்சாவடி விவரம் போன்றவை அதில் அச்சிடப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது, ‘‘வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளது.

வீடு, வீடாக சென்று பூத் சிலிப் விநியோகம் செய்யும் பணிகள் இன்று (நேற்று) தொடங்கியுள்ளோம். மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் இப்பணிகள் 2 நாட்களுக்குள் நிறைவு பெறும்.

அதேபோல, வேலூர் மாநகராட்சியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள 58 வார்டுகளில் 419 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன.

ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளன. 58 கவுன்சிலர் பதவிக்கு மொத்தம் 354 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தேர்தலின்போது பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகள் நேற்று முன்தினம் தொடங்கியது. வாக்குப்பதிவு இயந்திரங்களில் பேட்டரிகள் சரிபார்க்கப்பட்டு, பழுதடைந்த பேட்டரிகள் மாற்றப்பட்டு, புதிய பேட்டரிகள் மாற்றப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாநகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் அதாவது, வரும் 18-ம் தேதி மாலைக்குள் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும், தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x