Published : 14 Feb 2022 10:03 AM
Last Updated : 14 Feb 2022 10:03 AM

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி: திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேரில் ஆய்வு

திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணிகளை நேற்று ஆய்வு செய்த ஆட்சியர் அமர் குஷ்வாஹா.

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேற்று ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய 4 நகராட்சிகள், ஆலங்காயம், உதயேந்திரம் மற்றும் நாட்றாம்பள்ளி ஆகிய 3 பேரூராட்சிகளுக்கு உட்பட்ட 171 வார்டுகளுக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகள் திருப்பத்தூரில் நேற்று தொடங்கியது.

திருப்பத்துார் நகராட்சி அலுவலகத்தில், திருப்பத்துார் நகராட்சிக்கு உட்பட்ட 75 வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான 75 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நேற்று தொடங்கியது. இப்பணிகளை மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியரு மான அமர் குஷ்வாஹா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது, ‘‘வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 4 நகராட்சிகள், 3 பேரூராட்சிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தேர்தல் பணியில் ஈடுபட உள்ள வாக்குச்சாவடி அலுவலர் களுக்கு தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. தற்போது வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் 2 நாளில் நிறைவு பெறும்.

தேர்தலுக்கு முந்தைய நாள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்படும்’’ என்றார். அப்போது, திருப்பத்தூர் நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயராமராஜா, வட்டாட் சியர் சிவப்பிரகாசம் உட்பட பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x