Published : 13 Feb 2022 06:18 PM
Last Updated : 13 Feb 2022 06:18 PM
திருச்சி: போட்டி வேட்பாளர்கள் களத்தில் இருந்து விலகி.. வேட்பாளரின் வெற்றிக்குப் பாடுபடுவதுதான் நீதி, நியாயம், கூட்டணி தர்மமாகும் என்று கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த புத்தாநத்தத்தில் திருமண விழா ஒன்றில் பங்கேற்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் வருகை தந்திருந்தார். அப்போது அவர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ''மக்களவை, சட்டப்பேரவை ஆகிய தேர்தல்களைப்போல் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புத் தேர்தலிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். எதிர்க்கட்சிகள் விளம்பரம் செய்து, பணத்தைத் தண்ணீராக செலவழித்தாலும் திமுக அரசின் சாதனைகளை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்தத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு முழு வெற்றி கிடைக்கும். போட்டி வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளவர்கள் களத்தில் இருந்து விலகி, கூட்டணி தர்மத்தைக் பின்பற்றி, கூட்டணி வேட்பாளரின் வெற்றிக்குப் பாடுபடுவதுதான் நீதி, நியாயம், கூட்டணி தர்மமாகும்.
நாடு முழுவதும் ஒரே தேர்தல் சரிவராது: நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது நம் நாட்டுக்கு ஒத்துவராது. தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் மன்றம்தான் சட்டப்பேரவை. மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில்தான் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு தீர்மானத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியது அவரது அதிகாரத்தை மீறிய செயல் என்று அரசியல் சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். இப்போது மீண்டும் தமிழக அரசு அனுப்பியுள்ள தீர்மானத்தை, குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்ப வேண்டும். அதன்மீது குடியரசுத் தலைவர் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன்.
இந்திய அரசியலில் ஈடுபடுவது திமுகவுக்கு புதிதல்ல: தமிழக பாஜக தலைவர் கு.அண்ணாமலை பேசும் பேச்சு சட்டத்துக்குப் புறம்பானதாகவும், நாட்டின் அரசியலுக்கு முரண்பட்டதாகவும் உள்ளது. தொடக்கம் முதலே டெல்லியில் நிகழும் ஒவ்வொரு அசைவையும் நிர்ணயிக்கும் இடத்தில்தான் திமுக இருந்து வந்துள்ளது. எனவே, அகில இந்திய அரசியலில் திமுக ஈடுபடுவது புதிதல்ல. அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பு அமைப்பது தொடர்பாக சரியாக முடிவெடுத்து, சரியான நேரத்தில் அறிவிப்பை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்.
ஆளுநர்களுக்கு மோடி அறிவுறுத்தவேண்டும்: பாஜக ஆளாத மாநிலங்களில் அரசியல் சட்டம் அளித்துள்ள வரம்புகளை மீறி எதேச்சையதிகார முறையில் ஆளுநர்கள் செயல்பட்டு வருகின்றனர். சட்டப்படி நடக்குமாறு அவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்த வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்கும் விவகாரத்தில் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த- தகுதியானவர்களை- பாரபட்சம் காட்டாது திமுக அரசு விடுவிக்கும் என்று நம்புகிறோம்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT