Published : 13 Feb 2022 01:10 PM
Last Updated : 13 Feb 2022 01:10 PM
சென்னை: தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசுக் கல்லூரி கட்டணத்தை செயல்படுத்தாமல், உடனடியாக சேர அரசே கட்டாயப்படுத்துவது கட்டணக் கொள்ளையை ஊக்குவிக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ தமிழ்நாட்டில் மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு கல்லூரிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்று தொடங்கி வரும் 16-ஆம் தேதிக்குள் அனைத்து மாணவர்களும் அவரவர் கல்லூரிகளில் சேரும்படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தாமதத்தை தவிர்ப்பதற்கான இந்த அவசரம் வரவேற்கத்தக்கது!
ஆனால், தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 50% மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி கட்டணமான ரூ.13,610 மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்ற தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவிப்பை அரசாணையாக வெளியிடுவதில் இந்த அவசரம் என்னவானது?
தேசிய மருத்துவ ஆணைய வழிகாட்டுதல்படி தனியார் கல்லூரிகளில் கட்டணம் குறைக்கப்படும் என்று நம்பி, தனியார் கல்லூரிகளை தேர்ந்தெடுத்த ஏழை, நடுத்தர குடும்ப மாணவர்கள், முழுக்கட்டணத்தையும் செலுத்தும்படி தனியார் கல்லூரிகள் கட்டாயப்படுத்தினால் என்ன செய்வர், எங்கே போவார்கள். தேசிய மருத்துவ ஆணைய வழிகாட்டுதல்படி தனியார் கல்லூரிகளில் 50% இடங்களுக்கு அரசு கல்லூரி கட்டணமான ரூ.13,610 மட்டும் வசூலிக்க தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் அது தனியார் மருத்துவக் கல்லூரி கட்டணக் கொள்ளையை ஊக்குவிக்கும். “ என்று பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT