Published : 13 Feb 2022 11:14 AM
Last Updated : 13 Feb 2022 11:14 AM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சியில் திமுக சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போதிலும், சுறு சுறுப்பாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று பிரசவலி ஏற்பட்டதையடுத்து, தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தஞ்சாவூர் மாநகராட்சி 51-வது வார்டில் திமுக சார்பில் மருத்துவர் அஞ்சுகம்பூபதி போட்டியிடுகிறார். இவர் திமுகவில் தஞ்சாவூர் மத்திய மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளராக இருக்கிறார். இவரது கணவர் வெற்றிக்குமார் திகவில் மாநில இளைஞரணி துணை செயலாளராக இருக்கிறார். இவர்களுக்கு ஏற்கெனவே மூன்றரை வயதில் கயல் என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான அஞ்சுகம் பூபதிக்கு, தஞ்சாவூர் மாநகராட்சி தேர்தலில் 51-வது வார்டில் போட்டியிட திமுக தலைமை வாய்ப்பு வழங்கியது. பிப்.25-ம் தேதிக்குள் குழந்தை பிறந்து விடும் என அறியப்பட்ட நிலையிலும், தினமும் காலை, மாலை என இரண்டு வேளையும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பிரச்சாரத்துக்கு கிளம்பிய, அஞ்சுகம் பூபதிக்கு பிரசவலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அருளானந்த நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பிற்பகலுக்கு மேல் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனையறிந்த அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனை முன் திரண்டனர்.
தாய் மற்றும் சேய் நலமாக இருப்பதாக அஞ்சுகம் பூபதியின் கணவர் வெற்றிக்குமார் எல்லோரிடத்திலும் தெரிவித்தார்.
இதுகுறித்து வெற்றிக்குமார் கூறுகையில், ”தேர்தலில் வெற்றி பெறும் முன்பே, எங்களுக்கு பரிசு கிடைத்து விட்டது. இதை கேள்விப்பட்ட கட்சியினர் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் சில தினங்களில் மீண்டும் அஞ்சுகம் பூபதி பிரச்சார களத்துக்கு செல்வார்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT