Published : 13 Feb 2022 09:03 AM
Last Updated : 13 Feb 2022 09:03 AM
தற்போது கூட்டாட்சி தத்துவத்துக்கு ஆபத்து வந்துள்ளது. மாநிலங்களுக்கான உரிமையும், சலுகையும் தரப்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, காணொலி மூலமாக நேற்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். 200-க்கும் மேற்பட்ட இடங்களில் எல்இடி திரை மூலமாக முதல்வரின் உரை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: உங்களுக்கு உழைக்க உருவாக்கப்பட்டதுதான் திமுக. சமூக நீதியும், மாநில சுயாட்சியும்தான் நமது அடிப்படை. நாடு முழுவதும் சமூக நீதியை மலர வைக்க என்னை நானே ஒப்படைத்துள்ளேன். 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, சமூக நீதி பணியைத் தொடங்குவோம். சமூகநீதி நாடாக இந்தியா ஆக்கப்பட வேண்டும். மொழிவாரி மாநிலங்கள் சேர்ந்ததுதான் மத்திய அரசு. தற்போது கூட்டாட்சி தத்துவத்துக்கு ஆபத்து வந்துள்ளது. மாநிலங்களுக்கான உரிமையும், சலுகையும் தரப்பட வேண்டும்.
3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி, மத்திய பாஜக அரசை அடிபணிய வைத்தார்கள் விவசாயிகள். நீட் தேர்வு மருத்துவக் கல்லூரி கனவை சிதைக்கிறது. ‘நீட்’ தேர்வை திணித்தது மத்திய பாஜக அரசுதான். அண்ணா, திராவிடம், முன்னேற்றம், கழகம் என அனைத்தையும் இழந்து வெறும் பலகையாக நிற்கிறது அதிமுக.
திருப்பூர் என்பது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மையம். கரோனா தீவிரமாக பரவியபோது, அதில் அதிகம் பாதிக்கப்பட்டது சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள்தான். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் முதலீட்டு நிறுவனத்துக்கு மானியமாக ரூ.280 கோடி ஒதுக்கப்பட்டது. தமிழகத்தில் 6 இடங்களில் புதிய தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட உள்ளன.
கோவை, சென்னையில் தொழிலாளர்களுக்கு குறைந்த வாடகையில் குடியிருப்புகள் அமைய உள்ளன. பருத்தி, பஞ்சு மற்றும் கழிவு பஞ்சுக்கான ஒரு சதவீதம் சந்தை நுழைவு வரியை, பல்வேறு தரப்பு கோரிக்கையை ஏற்று மாநில அரசு நீக்கியது. இதையடுத்து, கோவை, மதுரை, விருதுநகர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பஞ்சுக் கிடங்கை அமைக்க, இந்திய பருத்திக் கழகம் முன்வந்துள்ளது.
மத்திய பாஜக பட்ஜெட்டில் வைரத்துக்கு வரியை குறைத்துஉள்ளனர். ஆனால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வரி குறைக்கப்படவில்லை. திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு என எந்தவித சலுகையும் இல்லை. மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைக்கு திருப்பூர் ஒன்றே உதாரணம். தொழிலை அதலபாதாளத்துக்கு கொண்டு சென்றுவிட்டனர். பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி விதிப்பால் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் கடும் நஷ்டத்தில் இயங்குகின்றன. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சமூக நீதியும், மாநில சுயாட்சியும்தான் நமது அடிப்படை. நாடு முழுவதும் சமூக நீதியை மலர வைக்க என்னை நானே ஒப்படைத்துள்ளேன். 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, சமூக நீதி பணியைத் தொடங்குவோம். சமூகநீதி நாடாக இந்தியா ஆக்கப்பட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...