Published : 06 Apr 2014 02:43 PM
Last Updated : 06 Apr 2014 02:43 PM
இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் இலங்கையும் இன்று மோத உள்ளதால் தமிழக மீனவர்கள் கடலுக்குச் செல்ல அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
கடந்த 2011 ஏப்ரல் 2 அன்று உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியை இந்திய அணி வென்றது. இதனால் ஆத்திரமடைந்த இலங்கைக் கடற்படையினர் அன்றிரவு பாக்ஜலசந்தி கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் விக்டஸ், ஜான்பால், மாரிமுத்து, அந்தோணிராஜ் ஆகிய 4 பேரையும் சித்ரவதை செய்து படுகொலை செய்தனர்.
பின்னர், இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவிடம் எப்போதெல்லாம் தோற்கிறதோ அப்போதெல்லாம் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், சிறைப்பிடிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இறுதி ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று இன்று வங்கதேசத்தின் மிர்பூரில் நடைபெற உள்ள இறுதி ஆட்டத்தில் இலங்கையுடன் மோத உள்ளது. இதனால், தமிழக மீனவர்கள் கடலுக்குச் செல்ல அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
இதுகுறித்து நமது செய்தியாளரிடம் ராமேஸ்வரம் மீனவர் பிரதிநிதி ஒருவர் கூறும்போது, "கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் நடைபெற்ற உலகப் கோப்பை இறுதி ஆட்டத்தில் இலங்கை தோற்றதால் இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் விக்டஸ், ஜான்பால், அந்தோணிராஜ், மாரிமுத்து ஆகிய நான்கு மீனவர்களை கொன்றது. இதில் ஒரு மீனவரின் உடல் யாழ்ப்பாணம் அருகில் கரை ஒதுங்கியது. இரு மீனவர்கள் உடல் தொண்டியிலும், இன்னொருவரின் உடல் புதுக்கோட்டையிலும் கரை ஒதுங்கியது. அவர்களது உடலில் தாக்கி சித்திரவதை செய்யப்பட்ட அடையாளங்கள் இருந்தன. ஒரு மீனவரின் தலையும், ஒரு மீனவரின் கையும் துண்டிக்கப் பட்டும் கொடுரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இன்று இருபது ஓவர் போட்டி இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், இலங்கையும் மோதவுள்ளதால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்குச் செல்வதை நிறுத்தியுள்ளனர்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT