Published : 13 Feb 2022 12:08 PM
Last Updated : 13 Feb 2022 12:08 PM

வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது; வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

கடலூரில் அதிமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம்.

கடலூர்

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வாக்குறு திகளை நிறைவேற்ற முடியாத அரசாக திமுக உள்ளது என அதிமுகஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, கடலூரில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நேற்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்தார்.

நிகழ்வுக்கு கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் தலைமை தாங்கினார்.அதிமுக அமைப்புச் செயலாளரும் கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளருமான சொரத்தூர் ராஜேந்திரன்,கடலூர் மேற்கு மாவட்டச் செய லாளர் அருண்மொழித்தேவன், கடலூர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் கே.ஏ. பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் அதிமுக ஒருங் கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சி தமிழகத்தின் பொற்காலம். திமுக கடந்த 2021 தேர்தலில் நிறைவேற்ற முடியாத, பொய்யான வாக்குறுதிகளை வழங்கி, வெற்றி பெற்றுவிட்டது. வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்துள்ளது. ‘வெற்றி பெற்றவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்துதான்’ என்றார் ஸ்டாலின்.

நீட்டை கொண்டு வந்ததுகாங்கிரஸ் - திமுக கூட்டணி அரசுதான். அப்போது மத்திய சுகா தாரத் துறை இணை அமைச்சராக இருந்த காந்திசெல்வன்தான் நீட்டை கொண்டு வந்தார். அதனை மூடி மறைத்து, நீட் மூலம் அரசியல் வியாபாரம் செய்தது திமுக. தற்போது நீட் தேர்வை ரத்து செய்ய முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறது.

37 லட்சம் பேர் கடனாளிகள்

‘மாதம்தோறும் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகைவங்கி மூலம் தருவேன்’ என்று வாக்குறுதி தந்த திமுகவால் அதனை நிறைவேற்ற முடிய வில்லை. விவசாயிகள், ‘நகைகளை கொண்டுபோய் அடகு வைத்துக் கொள்ளுங்கள்; நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நகை கடன்களை ரத்து செய்கிறோம்’ என்று உதயநிதி ஸ்டாலின் சொன்ன பொய்யான வாக்குறுதியால் 50 லட்சம் பேர் நகைகளை அடகு வைத்தனர். ஆட்சிக்கு வந்தவுடன் அந்த நகைக் கடன்களை ரத்து செய்யாமல், தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே ரத்து என்று அறிவித்தது. 37 லட்சம் பேர் தற்போது கடனாளியாகி உள்ளனர். இதற்கு பொறுப்பு திமுக தான்.

கடந்த 10 ஆண்டுகளாக மின் மிகை மாநிலமாக நாங்கள் தமிழகத்தை வைத்திருந்தோம். 7 ஆண்டுகளாக தரமான பொங்கல் தொகுப்பும் நிதியும் கொடுத்தோம். கடந்த 2021-ம் ஆண்டு நாங்கள் பொங்கல் தொகுப்பாக ரூ.2,500 கொடுத்தபோது, ‘ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும்’ என்று ஸ்டாலின் அறிக்கை விடுத்தார். தற்போது அவர்கள் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. இவர்கள் ஆட்சியில் கொடுத்த பொங்கல் தொகுப்பில் இடம்பெற்ற பொருட்களும் தரமில்லாமல் இருந்தன. திமுகவின் பகல் வேஷம் இப்போது கலைந்துவிட்டது. கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்ற முடியாத அரசாக திமுக இருந்து வருகிறது.

இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொண்டர்களுக்கான தேர்தல். அவர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டிய கடமை அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கு உள்ளது. ஆட்சி அதிகாரத்தில் உள்ள திமுக வினர் பல முறைகேடுகளை செய் வார்கள். கண் துஞ்சாது தேர்தல் பணியாற்றி நமது வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் எம்.சி.தாமோதரன், செல்வி ராமஜெயம், அதிமுக அமைப்பு செயலாளர் என்.முருகுமாறன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சேவல் ஜி.ஜே.குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக புதுச்சேரி வந்திந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை நேற்று காலை, புதுச்சேரி அதிமுக செயலாளர்கள் அன்பழகன், ஓம்சக்தி சேகர், முன்னாள் எம்பி ராமதாஸ், முன்னாள் எம்எல்ஏக்கள் பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் உள்ளிட்டோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

ஓ.பன்னீர்செல்வம் அவர்களுடன் புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x