Published : 13 Feb 2022 01:27 PM
Last Updated : 13 Feb 2022 01:27 PM
திமுக அளித்த 517 தேர்தல் வாக்குறுதிகளில் முழுமையாக 7 வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றவில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருச்சி மாவட்டத்திலுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம் மரக்கடை பகுதியில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசியதாவது: தூய்மையான உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்க, ஊழல் இல்லாத நிர்வாகத்தைக் கொடுக்க பாஜக வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். பிரதமர் மோடியை திட்டுவதுதான் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு முதல் வேலையாக உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்கும் நேரடி பிரச்சாரத்துக்கே வரவில்லை. மக்களின் கோபத்துக்கு ஆளாக வேண்டாம் என்பதால் நேராக வருவதற்குப் பதிலாக காணொலியில் பிரச்சாரம் செய்கிறார்.
தமிழகத்தில் இதுவரை 12 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் பாஜக வேட்பாளர்கள் பலர் வெற்றி பெறுவர் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
இக்கூட்டத்தில் பாஜக மாவட்டத் தலைவர் ராஜசேகரன், நிர்வாகிகள் பார்வதி நடராஜன், இல.கண்ணன், பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, கரூர் மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து கரூர் வெங்கமேடு, லைட்ஹவுஸ் முனை, ராயனூர் நால்ரோடு உள்ளிட்ட இடங்களில் அண்ணாமலை பேசியதாவது: கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வாங்கியவர்களில் 73 சதவீதம் பேருக்கு கடன் தள்ளுபடி ஆகவில்லை. சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக அளித்த 517 வாக்குறுதிகளில் 7 வாக்குறுதிகளை கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. எனவே, மக்கள் மறுபடியும் ஏமாற மாட்டார்கள். இந்த 8 மாத திமுக ஆட்சியானது மக்களுக்கு 80 ஆண்டுகள் சலிப்பைத் தந்துள்ளது என்றார்.
இப்பிரச்சாரத்தில், மாவட்டத் தலைவர் வி.வி.செந்தில்நாதன், மாவட்ட பொதுச்செயலாளர் மோகன், முன்னாள் மாவட்டத் தலைவர் கே.சிவசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT