Published : 03 Apr 2016 02:16 PM
Last Updated : 03 Apr 2016 02:16 PM
நீலகிரியில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் நுழைந்து விடுகின்றனர். அடர்ந்த வனப் பகுதிகளில் குப்பை மற்றும் கழிவுகளை வீசிச் செல்வதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், வன விலங்குகள் உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
வன வளம் நிறைந்த மாவட்டம் நீலகிரி. மாநில அரசின்படி இம் மாவட்டம் 56 சதவீத வனப் பகுதியை கொண்டது.
மாநில விலங்கான நீலகிரி வரையாடு, பறவையான மரகத புறா, தேசிய விலங்கான புலி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாவர மற்றும் விலங்கினங்கள் உள்ளன.
நீலகிரி மாவட்டம், சுற்றுலாவுக்கு பிரசித்தி பெற்றபோதும், அடர்ந்த வனப் பகுதிகள், சூழலியல் காரணமாக பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அவலாஞ்சி, அப்பர்பவானி
நீலகிரி வடக்கு வனக் கோட்டத்தில் உள்ள சீகூர், சிங்காரா சரகங்கள், தெற்கு வனக் கோட்டத்தில் உள்ள அவலாஞ்சி, அப்பர் பவானி மற்றும் வெஸ்டர்ன் கேட்ச்மென்ட் பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகும். இப் பகுதிகளில் வனத்துறை அனுமதியின்றி யாரும் உள்ளே நுழைய முடியாது. இப் பகுதிகளை பார்வையிட சாமானிய மக்களுக்கு அனுமதி கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ள நிலையில், வி.ஐ.பி.,க்களுக்கு அனுமதி கிடைத்து விடுகிறது.
அனுமதி கிடைப்பதில் பெரும் சிக்கல் உள்ளதால் மக்களுக்கு இப் பகுதி களை காண்பதில் ஆர்வம் அதிகமாகி றது. இதனால் போலி சுற்றுலா வழிகாட் டிகள், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அனுமதியில்லாமல் பலரை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் அனுமதிக்கின்றனர். குறிப்பாக, அவலாஞ்சி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வது அதிகரிக்கிறது.
இது குறித்து இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, வனத்துறை சார்பில் அவலாஞ்சி செல்ல இரு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த வாகனங்கள் மூலமே சுற்றுலா பயணிகள் அவலாஞ்சி வனப் பகுதிக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.
சிலரின் தவறான வழிக்காட்டுதலால், சில சுற்றுலா பயணிகள் தங்கள் சொந்த வாகனங்களில் அவலாஞ்சிக்கு சென்று விடுகின்றனர். அங்கிருந்து அடர்ந்த வனப் பகுதியான காட்டுக்குப்பை வரை செல்கின்றனர்.
விலங்குகள் பாதிப்பு
சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இப் பகுதிகளில் வாகனங்களை இயக்கு வதுடன், அங்கேயே உணவருந்தி கழிவுகள் மற்றும் குப்பைகளை வீசியெறிந்து சென்று விடுகின்றனர். இதனால் அப்பகுதியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. மேலும், இந்த கழிவுகளை வன விலங்குகள் உண்டு பாதிப்புக்குள்ளாகின்றன.
இப் பகுதிகளில் மின் உற்பத்திக்காக நீர் தேக்கப்படும் எமரால்டு, அவலாஞ்சி, அப்பர் பவானி அணைகள் உள்ளன. இந்த நீரையும் சுற்றுலா பயணிகள் மாசுபடுத்துகின்றனர். இது நீலகிரியின் சுற்றுச்சூழலுக்கு கடும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT