Published : 12 Feb 2022 07:15 PM
Last Updated : 12 Feb 2022 07:15 PM

திமுகவின் அங்கமாக செயல்படுகிறது மாநிலத் தேர்தல் ஆணையம்: ஆளுநரை அதிமுக நிர்வாகிகள் சந்தித்த பின் சி.வி.சண்முகம் பேட்டி

சென்னை: ’திமுகவின் மாநிலத் தேர்தல் பிரிவு செயலாளர் போல் மாநில தேர்தல் ஆணையர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான தங்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்தனர். இந்தச் சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் சி.வி.சண்முகம் பேசியது: "தேர்தல் ஆணையம் என்பது, அனைவருக்கும் பொதுவான, தன்னிச்சையான, சுதந்திரமாக செயல்படக்கூடிய அதிகாரம் படைத்த ஒரு அமைப்பு. ஆனால் இன்றைய நிலை என்ன? மாநிலத் தேர்தல் ஆணையம் என்பது, திமுகவின் ஓர் அங்கமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தத் தேர்தல் தொடங்கப்பட்டதில் இருந்து வேட்புமனு தாக்கல், வேட்புமனு பரிசீலனை, வேட்புமனு திரும்ப பெற்றது வரை தினந்தோறும் விதிமுறைகளை ஆளுங்கட்சிக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் மாற்றிக் கொண்டிருக்கிறது. மாநில தேர்தல் ஆணையர், திமுகவின் மாநிலத் தேர்தல் பிரிவு செயலாளர் போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

உதாரணத்திற்கு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகளைப் போன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, இந்தத் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மையுடன் நடக்க வேண்டும் என்பதற்காக சில உத்தரவுகளை பிறப்பித்தது.

அந்த உத்தரவின்படி, வேட்புமனு தாக்கல், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை, வேட்புமனுக்களை திரும்ப பெறுதல், வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியீடு, தேர்தல் பிரச்சாரங்கள், வாக்குப்பதிவு, வாக்குப்பெட்டி வைக்கிறன்ற அறையின் உள்ளேயும், வெளியேயும், வாக்கு எண்ணிக்கையையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும். மேலும் நடைபெறவுள்ள தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (ஈவிஎம்) பயன்படுத்தப்பட உள்ளன. எனவே, வாக்குப்பதிவு இயந்திரத்தை திறந்த சில நிமிடங்களிலேயே வெற்றி பெற்றவர் யார் என்பது தெரிந்துவிடும். குறிப்பாக இதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்பதுதான் எங்களுடைய முக்கியமான கோரிக்கை.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இவை அனைத்தும் பதிவு செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டது, அதனை தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டது. ஆனால் நடைமுறையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? வேட்புமனு தாக்கல் செய்தபோது, அதிமுக வேட்பாளர்களை வேட்புமனு தாக்கல் செய்ய விடாமல், பல்வேறு அத்துமீறல்கள் நடைபெற்றன" என்று கூறினார்.

இந்த சந்திப்பின்போது, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், வழக்கறிஞர் பாபு முருகவேல் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x