Published : 13 Apr 2016 12:58 PM
Last Updated : 13 Apr 2016 12:58 PM
தமிழ் மாநில காங்கிரஸில் அதிருப்தியாளர்களால் ஏற்பட்டுள்ள குழப்பம், அவர்கள் அதிமுகவில் இணைவார்களா? தாய் கட்சியான காங்கிரஸுக்கு செல்வார்களா? என்ற சந்தேகங்கள் உலாவிக் கொண்டிருக்க, இதன் உச்சகட்ட அதிர்வு, தமாகா மூத்த தலைவரான, எஸ்.ஆர்.பியை முன்வைத்து சூலூரில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
மக்கள் நலக் கூட்டணியில் தமாகா சேர்ந்ததன் எதிரொலியாய், அக் கட்சி நிர்வாகிகள் பலர் அதிருப்தியடைந்து வாசனின் செயல்பாட்டை வெளிப்படையாக விமர்சித்து வருகின்றனர். அதில் முக்கியமானவர் அக்கட்சியின் மூத்த தலைவர் எஸ்.ஆர்.பி. கோவை மாவட்டம் சூலூர் தொகுதிக்குள் வரும் சுல்தான்பேட்டை கிராமத்தை சேர்ந்தவரான இவர், முன்பு நீலகிரி தொகுதி எம்பியாகவும், அதற்குள்ளடங்கிய தொண்டாமுத்தூர் தொகுதியின் எம்.எல்.ஏவாகவும் இருந்துள்ளார். மத்திய இணை அமைச்சர், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளையும் வகித்துள்ளார்.
தமாகா அதிருப்தியாளர்கள் காங்கிரஸில் சேருவதா, புதிய கட்சியை உருவாக்கி அதிமுகவில் கொடுத்த சீட்டை வாங்கிக் கொண்டு போட்டியிடுவதா? என்ற குழப்பத்தில் இருப்பதாக பேச்சு அடிபட்ட நிலையில், பீட்டர் அல்போன்ஸ் மற்றும் ஆதரவாளர்கள் காங்கிரஸில் இணையப் போவதாக அறிவிப்புகள் வந்துள்ளன. ஆனால் எஸ்.ஆர்.பி. மற்றும் ஆதரவாளர்கள் மட்டுமே எந்த முடிவும் எடுக்காமல் உள்ளனர்.
அவர்கள் போட்டி தமாகாவை உருவாக்கி அதிமுக கூட்டணியில் சேருவார்கள் என்ற பேச்சே மிகுதியாக உள்ளது. எனவே இவர்கள் கூட்டணிக்குள் வந்தால் அதிமுக வேட்பாளர்கள் யாருக்கெல்லாம் பாதிப்பு வருமோ என்ற கவலையும் அதிமுகவினர் மத்தியில் உள்ளது.
குறிப்பாக, எஸ்.ஆர்.பி. குறிவைப்பது அவரது சொந்த ஊரான சுல்தான்பேட்டை அடங்கியுள்ள சூலூர் தொகுதி என்ற பேச்சும் உள்ளது. இத்தொகுதி வேட்பாளராக அதிமுகவில் ஆர்.கனகராஜ் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகளும் தொடங்கப் பட்டுள்ளது. அதே சமயம் திமுக கூட்டணியில் இத்தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டு விட்டது. இந்த சூழ்நிலையில், எஸ்.ஆர்.பி. அதிமுக அணியில் இங்கே களம் இறங்கினால் ஏற்கெனவே உள்ள வேட்பாளருக்குத்தான் பாதிப்பு வரும் என்ற பேச்சும் உள்ளது.
சூலூர் தொகுதியில் கணிசமாக உள்ள நாயுடு சமூக மக்களின் வாக்குகளை கணிசமாக பெறுவதோடு, அதிமுகவின் வாக்குகளையும் அள்ளிவிடுவார் என்ற பேச்சும் பரவலாக உள்ளது. இதனால் அதிமுக, காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கலக்கம் உள்ளதை காணமுடிகிறது.
இதுகுறித்து எஸ்.ஆர்.பியை தொடர்புகொண்டு கேட்டபோது, ‘இன்னமும் நான் எந்த முடிவும் எடுக்கவில்லை. வெளியே உலாவும் செய்திகள் வெறும் வதந்திகள். நான் அதிமுக, காங்கிரஸ் என எந்த கட்சிக்கும் செல்வதாக இல்லை. இப்போதும் தமாகாவில்தான் இருக்கிறேன். சூலூர் என்பது எனது சொந்த ஊர் தொகுதி. அதை விட்டு விட்டு வேறு இடத்தில் போட்டியிடும் எண்ணமும் எனக்கு இல்லை!’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT