Published : 30 Apr 2016 07:24 PM
Last Updated : 30 Apr 2016 07:24 PM
நடைமுறையில் செய்யவேண்டியதை செய்யாமல் மதுவிலக்கில் அதிமுகவும், திமுகவும் விளையாட்டு காட்டுகிறது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் கூறியுள்ளார்.
தேமுதிக -மக்கள் நலக் கூட்டணி - தமாகா தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவை வந்திருந்த டி.கே.ரங்கராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது.
''5 மாநிலங்களில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்கள் மக்களிடம் உள்ள ஒரு தேசிய அளவிலான பொதுவான போக்கை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஊழல் எதிர்ப்பு, மதுபானக்கடை மூடல் நிலையும், பீகாரில் சாராயக்கடை மூடப்பட்டதும், ஊழல் எதிர்ப்புமான மனநிலையிலும் மக்கள் நகர்ந்து கொண்டிருப்பது, நாங்கள் 6 மாதங்களுக்கு முன்னர் எடுத்த முயற்சியின் வெளிப்பாட்டையே காட்டுகிறது. அது இன்றைய இளையதலைமுறையினர், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் நம்பிக்கை அளிக்கும் செயல்திட்டமாக மாறியுள்ளது.
தமிழ்நாட்டில் 1லட்சத்து 38 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலையில்லாத நிலை உருவாகியுள்ளது. இதே எண்ணிக்கையிலான மருத்துவப் பட்டதாரிகள், ஆசிரியர் படிப்பு முடித்தவர்கள் வேலைவாய்ப்பற்ற நிலையில் உள்ளனர். பட்டப்படிப்பை முடித்துவிட்டு இளைஞர்கள் சாராயக் கடை, பெட்ரோல் பங்க், ஆட்டோ ஓட்டுநர் என வேலைபார்க்கும் அவலம் பெருகிக் கொண்டே இருக்கிறது. திமுக, அதிமுக நினைத்திருந்தால் இதை தடுத்திருக்க முடியும். ஏன் இங்கே முதலீடுகள் வரவில்லை. ஒவ்வொரு நகரிலும் அதற்கேற்ப கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டிருந்தால் முதலீடுகள் பெருகியிருக்கும்.
திமுக, அதிமுக இரண்டுமே மேட்ச் பிக்ஸிங் போலவே இது போன்ற விஷயத்தில் செயல்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் திமுகவினரும், திமுக ஆட்சியில் அதிமுகவினரும் சட்டப்பேரவையில் இருக்க மாட்டார்கள். வெளிநடப்பு செய்துவிடுவார்கள். இப்படியிருந்தால் முதலீடுகளை பற்றியும், தொழில்களை பற்றியும் எப்படிப் பேசுவது? இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சட்டப்பேரவை கூட்டம் அரைமணிநேரம் மட்டும் நடந்துள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சபையில் அனைத்து உறுப்பினர்களும் பேசுவதற்கு வாய்ப்பு கொடுப்போம்.
சேலத்தில் கால் கொலுசு தொழில் அபாரமாக நடந்து வந்தது. சிறு பிள்ளையார் சிலைகள், ஊதுவத்தி, குங்குமப்பொட்டு ஆகியவை கூட ஊருக்குள் குடிசை தொழில்களாக நடந்து வந்தது. இப்போதெல்லாம் அவை வெளிநாட்டிலிருந்தே இறக்குமதி ஆகிறது. ஒரு விநாயகர் வெளியிலிருந்து இறக்குமதி ஆவது குறித்து பாஜக அரசாங்கமே கவலைப்படுவதில்லை. இப்படியிருந்தால் சிறு தொழில்கள் எப்படி செழிக்கும். அதைப்பற்றி எப்போதாவது சட்டசபையில் அதிமுக, திமுக விவாதித்ததுண்டா?
இவர்களால் ஊழலையும் சாராயத்தையும் ஒழிக்க முடியாது. பூரண மதுவிலக்கு அறிவிப்பு செய்திருக்கும் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் உள்ள பலர் சாராயக் கம்பெனி நடத்துகிறார்கள். அவர்களை இப்போதே அந்த கம்பெனியை மூடச்சொல்லட்டும். அதேபோல் மிடாஸ் சாராயக் கம்பெனியை ஜெயலலிதா மூடச் சொல்லட்டும். அப்படி செய்தாலே மதுவின் உற்பத்தி குறைந்து குடிப்பவரின் எண்ணிக்கை சரியுமே? நடைமுறையில் செய்யவேண்டியதை செய்யாமல் விளையாட்டு காட்டுகிறது.''
இவ்வாறு டி.கே.ரங்கராஜன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT