Published : 12 Feb 2022 11:57 AM
Last Updated : 12 Feb 2022 11:57 AM
தஞ்சாவூர்: இந்து மதத்தை பற்றி சமூக வலைதளங்களில் தவறாக கருத்துகளைப் பரப்பியதாகவும், கிலாபத் இயக்கத்துடன் தொடர்புடையதாகவும் சந்தேகத்தின் பேரில், தஞ்சாவூரில் மூவரின் வீட்டில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் சோதனை செய்தனர்.
கிலாபத் இயக்கத்தைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு, ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகவும், இந்து மதத்தினரைப் பற்றி சமூக வலைதளங்களில் தவறான கருத்துகளைப் பரப்பி வருவதாகவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவரைத் தொடர்ந்து, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த பாபா பக்ருதீன் என்பவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில், இயக்கத்தில் தொடர்புடையதாகக் கூறி தஞ்சை கீழவாசல், தைக்கால் தெருவை சேர்ந்த அப்துல் காதர், முகமது யாசின், காவேரி நகரை சேர்ந்த அகமது ஆகியோரது வீட்டில் தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் இன்று (பிப்.12) காலை 5:00 மணியில் இருந்து சோதனை நடத்தினர்.
அப்துல் காதர், முகமது யாசின் ஆகிய இருவரின் மொபைல் போன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், சில ஆவணங்களையும் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
இதனிடையே, இந்தச் சோதனையைக் கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT