Published : 12 Feb 2022 12:00 PM
Last Updated : 12 Feb 2022 12:00 PM
தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில், காற்றாலைகள் மூலம் 10 சதவீதம் கூடுதலாக மின் உற்பத்தி நடைபெற்றுள்ளது.
தமிழகத்துக்கான மின்சார தேவையை அனல், நீர், காற்று மற்றும் அணு மின்சாரம் பூர்த்தி செய்கின்றன. காற்றாலைகள் மூலம் சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத மின்சாரம் கிடைக்கிறது. இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழ்நாடு முக்கியப் பங்கு வகிக்கிறது.
தமிழகத்தில் கோவை, திருப்பூர், கரூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக காற்றாலைகள் உள்ளன. மொத்தமாக தமிழகத்தில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காற்றாடிகள் உள்ளன. இவை சுமார் 9,500 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டவை.
இந்நிலையில், கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பாண்டு 10 சதவீதம் கூடுதல் மின் உற்பத்தி தற்போது வரை கிடைத்துள்ளதாக காற்றாலை மின் உற்பத்தி துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, இந்திய காற்றாலைகள் சங்கத் தலைவர் கே.கஸ்தூரி ரங்கையன் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது:
தமிழகத்தைப் பொறுத்தவரை மாநிலத்தின் மின்சார தேவையை நிவர்த்தி செய்வதில் காற்றாலைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. 9,500 மெகாவாட் மின் உற்பத்திக்கான கட்டமைப்பு உள்ளது. சூரிய ஒளியைப் பயன்படுத்தும் சோலார் மின் உற்பத்தியைப் பொறுத்தவரை சுமார் 4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்திக்கான கட்டமைப்பு உள்ளது.
இந்திய காற்றாலைகள் சங்கம் சார்பில் காற்றின் வேகம், தன்மை குறித்த முன்னறிவிப்பை 24 மணி நேரத்துக்கு முன்னதாகவே தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்ட அரசு அமைப்புகளுக்கு தெரிவிப்பது வழக்கமாக உள்ளது. அதற்கேற்ப அவர்கள் பயன்பாட்டை திட்டமிட்டுக் கொள்வார்கள்.
வழக்கமாக, மே மாதம் முதல் செப்டம்பர் வரை காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், அந்த மாதங்களில் அதிகளவு காற்றாலை மின்சாரம் உற்பத்தியாகும். சில நேரங்களில் தேவைக்கு அதிகமாகவே மின் உற்பத்தி நடைபெறும்.
ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை மின் கணக்கீடு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அந்த வகையில் கடந்தாண்டில் காற்றாலைகள் மூலம் 10 ஆயிரத்து 800 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தியாகி உள்ளது. நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை 10 சதவீதம் கூடுதலாகவே மின் உற்பத்தி நடைபெற்றுள்ளது.
கடந்த 2017 - 2018-ம் ஆண்டில் 12,500 மில்லியன் யூனிட் மின்சாரத்தை நாம் உற்பத்தி செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT