Published : 12 Feb 2022 12:12 PM
Last Updated : 12 Feb 2022 12:12 PM

பைக்காராவில் வலம் வரும் காட்டுப்பன்றிகளால் மக்கள் அச்சம்

உதகையில் பைக்காரா நீர்வீழ்ச்சி செல்லும் பகுதியில் குட்டிகளுடன் வலம் வரும் காட்டுப்பன்றிகள். படம்:ஆர்.டி.சிவசங்கர்

உதகை

நீலகிரி மாவட்டம் பைக்காரா பகுதியில் இரை மற்றும் தண்ணீர்தேடி கூட்டம் கூட்டமாக காட்டுப்பன்றிகள் வலம் வருகின்றன. உதகை-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை, நீர்வீழ்ச்சி செல்லும் சாலைகளில் இவை சுற்றித்திரிவதால், சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

முதியோர், பெண்கள், குழந்தைகள் என பலரையும் பன்றிகள் தாக்க முற்படுகின்றன. திடீரென அவை சாலைகளை கடப்பதால், வாகனஓட்டிகள் தடுமாறி கீழே விழுகின்றனர்.

இதுதொடர்பாக சுற்றுலா ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘பைக்காரா நீர்வீழ்ச்சி செல்லும் பகுதியில் ஏராளமான உணவகங்கள் உள்ளன.இங்கு சேகரமாகும் கழிவுகள் திறந்தவெளியில் கொட்டப்படுகின்றன. இவற்றை உண்பதற்காக காட்டுப்பன்றிகள் வருகின்றன. நெடுஞ்சாலையை திடீரென கடப்பதால், வாகனஓட்டிகள் விபத்தில்சிக்குகின்றனர். இதை தடுக்கவனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘‘வனப்பகுதியைஒட்டி பைக்காரா அமைந்துள்ளதால், காட்டுப்பன்றிகள் அப்பகுதியில் வலம் வருகின்றன. திறந்தவெளியில் கொட்டப்படும் கழிவுகளால் ஈர்க்கப்படும் பன்றிகள் இங்கேயே சுற்றித்திரிகின்றன.

காட்டுப்பன்றியை வனத்துக்குள் விரட்டுவது சிரமமான காரியம். எனவே அப்பகுதியில் உள்ள உண வகங்களின் உரிமையாளர்கள், தங்கள் உணவகங்களில் சேகரமாகும் கழிவுகளை திறந்தவெளியில் கொட்டாமல், குப்பைத்தொட்டியில் கொட்ட வேண்டும்,’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x