Published : 20 Apr 2016 04:36 PM
Last Updated : 20 Apr 2016 04:36 PM
சவுதியில் மீன்பிடித் தொழிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சாப்பாடு, சம்பளம் வழங்காமல் கொத்தடிமை போல் சித்ரவதை அனுபவித்து வரும் 62 தமிழக மீனவர்களையும் ஏப். 28-க்குள் மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
ராமநாதபுரம், கன்னியாகுமரி, நாகை, தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 62 மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்காக சவுதி அரேபியாவுக்கு சென்றனர். அங்கு அவர்கள் கொத்தடிமையாக நடத்தப்படுகின்றனர். பாஸ்போர்ட், விசாவை உரிமையாளர்கள் பறித்து வைத்துக்கொண்டதால் அவர்களால் இந்தியா திரும்ப முடியவில்லை.
இந்நிலையில் மீனவர்களை மீட்க உத்தரவிடக் கோரி 62 மீனவர்களில் ஒருவரான சேதுராஜாவின் உறவினர் திருமுருகன், உயர் நீதிமன்ற கிளையில் ஆள்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார்.
அதில், ‘62 மீனவர்களும் சவுதியை சேர்ந்த யூசுப் கலீல் என்பவரிடம் மீன்பிடி தொழிலுக்காக சென்றனர். அவர் மீன்பிடித் தொழிலை தவிர்த்து மீனவர்களை வேறு எங்கும் செல்ல அனுமதிப்பதில்லை.
சம்பளம், சாப்பாடு வழங்காமல் துன்புறுத்தப்படுகின்றனர். தனி அறையில் அடைத்து சித்ரவதை செய்யகின்றனர். ஊருக்கு செல்லவும் அனுமதிக்கவில்லை.
இதனால் மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு பதில் மனுத் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கோகுல்தாஸ் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிட்டார். மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பதில் மனுத் தாக்கல் செய்ய மேலும் அவகாசம் கோரினார்.
அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், 62 மீனவர்களையும் மீட்டு ஏப். 28-ம் தேதிக்குள் இந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர் நலத்துறை செயலர்களுக்கு உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை ஏப். 28-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT