Published : 12 Feb 2022 12:49 PM
Last Updated : 12 Feb 2022 12:49 PM

டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை: நெல் அறுவடை பணிகள் பாதிப்பு

திருவாரூர்/ நாகப்பட்டினம்/ மயிலாடுதுறை/ தஞ்சாவூர்/ அரியலூர்

திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று வரை விட்டுவிட்டு மிதமாகவும், பலமாகவும் மழை பெய்தது. இதன் காரணமாக, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மட்டுமின்றி, விற்பனை செய்வதற்காக விவசாயிகள் கொண்டுவந்த நெல் மூட்டைகளும் மழையில் நனைந்தன. இதனால் விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள்.

அதேபோல, சம்பா, தாளடி அறுவடைப் பணிகளும் பாதிக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படாததால் மாணவ, மாணவிகள் மழையில் நனைந்து சிரமத்துக்குள்ளாயினர். மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தொடர் மழையின் காரணமாக நாகை சங்கர விநாயகர் கோயில் தெருவில் உள்ள ஜெகநாதன்(55) என்பவருக்கு சொந்தமான ஓட்டு வீடு நேற்று மதியம் இடிந்து விழுந்தது. இதில், வீட்டுக்கு வெளியே பெட்டிக்கடை வைத்திருந்த ஜெகநாதன் கட்டிட இடிபாடுகளில் சிக்கினார். பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு, நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேற்று காலை வரை பெய்த மழையளவு விவரம்: (மில்லி மீட்டரில்) நாகப்பட்டினம் 21.80, திருப்பூண்டி 46.20, வேளாங்கண்ணி 44, திருக்குவளை 30, தலைஞாயிறு 23.20, வேதாரண்யம் 69.60, கோடியக்கரை 80 மி.மீ என பதிவானது.

இதேபோல, மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறையில் 24 மி.மீ, தரங்கம்பாடியில் 4 மி.மீ மழை பதிவானது.

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் 50.4, நன்னிலம் 45.80, குடவாசல் 51.40, வலங்கைமான் 30.60, நீடாமங்கலம் 63, பாண்டவையாறு தலைப்பு 62, திருத்துறைப்பூண்டி 42.60, முத்துப்பேட்டை 3.2 மி.மீ என மழை பதிவானது.

தஞ்சாவூர் மாவட்டத்தில்...

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு, தஞ்சாவூர், கும்பகோணம், திருவிடைமருதூர் உள்ளிட்ட இடங்களில் பரலவலாக மழை பெய்தது.

இந்த மழையின் காரணமாக சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடை பாதிக்கப்பட்டது. அதேபோல, அறுவடை செய்து விற்பனைக்காக கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டிருந்த நெல் குவியல்கள் மழையில் நனைந்தன. இதனால், மாவட்டம் முழுவதும் நெல் கொள்முதல் பணியில் தொய்வு ஏற்பட்டது.

அதேநேரம், தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலை, எள், உளுந்து ஆகிய பயிர்களுக்கும், பூதலூர் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பின்தங்கிய நெல் நடவுக்கும் இந்த மழை மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

அரியலூர் மாவட்டத்தில்...

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், திருமானூர், ஜெயங்கொண்டம், தா.பழூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று லேசான சாரல் மழை பெய்தது. இதனால், மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் சம்பா நெல் அறுவடை பணிகள் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டன.

அதேநேரம், அறுவடை செய்யப்பட்டு, நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக தரையில் கொட்டியும், மூட்டைகளாக அடுக்கியும் வைக்கப்பட்டிருந்த நெல்மணிகள் மழையில் நனையாதவாறு விவசாயிகள் படுதாக்களைக் கொண்டு மூடிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x