Published : 11 Feb 2022 07:27 PM
Last Updated : 11 Feb 2022 07:27 PM

ரூ.2,390 கோடி... கோயில் நிலங்களுக்கான வாடகை பாக்கியை வசூலிக்க அறநிலையத் துறை நடவடிக்கை: உயர் நீதிமன்றம் பாராட்டு

சென்னை: இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில் நிலங்களிலிருந்து வரவேண்டிய ரூ.2,390 கோடி வாடகை பாக்கியை வசூலிக்கும் அறநிலையத் துறையின் நடவடிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

தமிழக இந்து சமய அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள், இடங்கள், கட்டடங்கள் ஆகியவற்றின் வாடகை பல ஆண்டுகளாக வசூலிக்கப்படவில்லை என வெங்கட்ராமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் வாடகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த ஆண்டு அக்டோபர் வரை தமிழக இந்து சமய அறநிலையத் துறை கோயில் நிலங்களிலிருந்து வர வேண்டிய வாடகை பாக்கி 2,390 கோடி ரூபாயை வசூலிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். முறையாக வசூலித்திருந்தால் 100 கோயில்களை நன்றாக பராமரித்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

அப்போது காணொலி மூலம் ஆஜராகியிருந்த அறநிலையத் துறை ஆணையர், ஒரு வருடத்திற்கு 540 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, நாளொன்றுக்கு 2 முதல் 3 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பு அகற்றம் மற்றும் வாடகை வசூலில் காவல்துறை மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அறநிலையத் துறை தரப்பில் வாடகைதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கோயில்களின் சொத்துக்களும் தொகுக்கப்பட்டு, வாடகைதாரர்களின் பட்டியலும், வாடகை செலுத்தாதவர்களின் பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது. அவை விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.

இதையடுத்து அறநிலையத் துறையின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

இந்நிலையில், கோயில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு விளக்கம் அளித்த அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், அறங்காவலர்களை தேர்ந்தெடுப்பதற்கான குழுவை அமைப்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்த 4 வாரங்களில் மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்படும் என உத்தரவாதம் அளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x