Last Updated : 10 Feb, 2022 07:50 PM

 

Published : 10 Feb 2022 07:50 PM
Last Updated : 10 Feb 2022 07:50 PM

தம்பதியின் வேட்புமனுக்களை நிராகரிக்க கோரிய சுயேச்சை வேட்பாளருக்கு ரூ.1000 அபராதம் விதித்தது உயர் நீதிமன்றம்

மதுரை: சிவகங்கை நகராட்சியில் ஒரே வார்டில் போட்டியிடும் கணவன், மனைவி ஆகியோரின் வேட்புமனுக்களை நிராகரிக்கக் கோரி வழக்கு தொடர்ந்த சுயேச்சை வேட்பாளருக்கு அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை குழந்தைசாமி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: சிவகங்கை நகராட்சி 27-வது வார்டில் நான் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன். இதே வார்டில் மாரிமுத்து, அவர் மனைவி பரமேஸ்வரி ஆகியோரும் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர். மாரிமுத்து மீது 10 வழக்குகளும், அவர் மனைவி பரமேஸ்வரி மீது ஒரு வழக்கும் உள்ளது. ஆனால் இருவரும் வேட்புமனுவில் தங்கள் மீது வழக்குகள் இருப்பதை தெரிவிக்கவில்லை. வேட்புமனு பரிசீலனையின்போது இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தேன். இருப்பினும் அதிகாரிகள் என் ஆட்சேபனையை கருத்தில் கொள்ளாமல் இருவரின் வேட்புமனுக்களையும் ஏற்றுக்கொண்டனர். இது தேர்தல் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. எனவே இருவரின் வேட்புமனுக்களை நிராகரிக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு பரேஷ் உபாத்யா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், குறிப்பட்ட சிலருக்காக வேட்பாளர்கள் பட்டியலை எப்படி ரத்து செய்ய முடியும். மனுதாரரின் கோரிக்கை அவருக்கு எதிராகவே அமைந்துள்ளது. எனவே மனுதாரருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படுகிறது. இப்பணத்தை மாநில தேர்தல் ஆணையத்துக்கு 15 நாளில் மனுதாரர் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x