Published : 10 Feb 2022 05:53 PM
Last Updated : 10 Feb 2022 05:53 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் மாணவ, மாணவிகளுக்கு போதிய ஊட்டச்சத்துக்காக மதிய உணவோடு நவதானியம்,வேர்க்கடலை, வாழைப்பழம் சேர்க்க ஆளுநர் தமிழிசையுடன் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசித்துள்ளார்.
புதுவை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. காலையில் ரொட்டி, பால், மாலையில் சூடான பால் வழங்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஆட்சியில் காலையில் ரொட்டி, பாலுக்கு பதிலாக இட்லி, பொங்கல் போன்ற சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அரசு அறிவித்தது. ஆனால் இது நடைமுறைக்கு வரவில்லை. இதனிடையே கரோனா தொற்று பரவ தொடங்கியதால் 2 ஆண்டுகளாக பள்ளிகள் அவ்வப்போது திறக்கப்பட்டு வந்தன. இதனால் மதிய உணவுக்கு பதிலாக அரிசி, பருப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இது முழுமையாக குழந்தைகளுக்குப் பயன் தரவில்லை. அரசு பள்ளிகளில் பெரும்பாலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களே படித்து வருகின்றனர். அவர்கள் அரசின் ஊட்டச்சத்து உணவை நம்பியே உள்ளனர். மாணவர்களுக்கு அரசு உணவுப் பொருட்கள் வழங்கினாலும், சூடான சமைத்த உணவு வழங்குவது நல்ல மாற்றாக இல்லை என்று பலரும் தெரிவித்தனர். தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசையை, கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆளுநர் மாளிகையில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை தொடர்பாக ராஜ்நிவாஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "வரும் 2023-ம் ஆண்டை நவதானியங்கள் ஆண்டாக உலக உணவு, விவசாய அமைப்பு கொண்டாட உள்ளது. அதை முன்னின்று நடத்த இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே மதிய உணவில் நவதானியங்களையும், கருப்பட்டி, வேர்க்கடலை, வாழைப்பழம் போன்ற சத்தான உணவுகளை சேர்ப்பதற்கு வேண்டிய முயற்சிகளையும் செய்து கொடுக்க ஆலோசனையும், அறிவுரையும், வழிகாட்டுதல்களையும் ஆளுநர் தமிழிசை வழங்கினார்.
புதிய கல்விக்கொள்கையின்படி மாணவர்களுக்கு பள்ளிகளிலும், கல்லுாரிகளிலும் அவர்களின் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான உணவுகளை வழங்குவதோடு அதை கண்காணிக்கவும் கல்வி அமைச்சருக்கு வலியுறுத்தினார்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT