Published : 10 Feb 2022 04:08 PM
Last Updated : 10 Feb 2022 04:08 PM
சென்னை: மாற்றுத்திறன் தேர்வர்களுக்கு தொலைதூர மாவட்டங்களில் தகுதித் தேர்வு மையங்கள் உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் இருப்பதால், ஆசிரியர் தகுதித் தேர்வுகள் ஒத்திவைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மாநில தலைவர் ஜான்ஸிராணி, பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன் இணைந்து அனுப்பிய கடிதத்தில், "தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பிப்-12 முதல் 20 ஆம் தேதி வரை ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்துகிறது. இந்த வாரியம் செயல்படுத்தியுள்ள மாற்றுத்திறனாளிகள் விரோத தேர்வு நடைமுறைகள், தேர்வுகளை எதிர்பார்த்துக் காத்திருந்த பார்வை பாதிப்பு உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மாற்றுத்திறன் தேர்வர்களை கடும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு நடைபெறும் இத்தேர்வில் பார்வைத்திறன் பாதிப்பு உள்ளிட்ட சுமார் 4,000 மாற்றுத்திறன் தேர்வர்கள் இத்தேர்வுகளை எழுத உள்ளனர்.
தொலைதூர மையங்கள்: தேர்வுகள் துவங்க 2 நாட்களே இடைவெளி இருந்த நிலையில், இதற்கான நுழைவுச்சீட்டுகள்(Hall Ticket) தேர்வு வாரிய இணையதளத்தில் நேற்று (பிப்-9) இரவு வெளியிடப்பட்டன. இதில் மாற்றுத்திறன் தேர்வர்களுக்கு தொலைதூர மாவட்டங்களில் மையங்கள் நிச்சயிக்கப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
7-30க்கு ஆஜராக: குறிப்பாக திருச்சியில் வசிக்கும் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு செங்கல்பட்டிலும், சென்னையைச் சேர்ந்த பலருக்கு காஞ்சிபுரம் உள்ளிட்ட தொலைதூரங்களிலும், பொதுப் போக்குவரத்து இல்லாத தேர்வு மையங்களும் நிச்சயிக்கப்பட்டுள்ளன. அதிலும் காலை 7-30 மணிக்கெல்லாம் தேர்வு மையங்களில் ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறன் பெண்கள் உள்ளிட்டோருக்கு இது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக பார்வை மாற்றுத்திறனாளிகள் இந்த புதிய இடத்தை எப்படி தேடி சென்றடைய முடியும் என கவலையில் உள்ளனர்.
பதிலி எழுத்தர்/கணினி: பார்வை மற்றும் இரு கைகளும் பாதிப்படைந்தோர் உள்ளிட்ட மாற்றுத்திறன் தேர்வர்கள் பதிலி எழுத்தர்களும் (Scribe), கணினியில் தேர்வு எழுத விரும்பும் தேர்வர்களுக்கு கணினிகளும் ஏற்பாடு செய்துதர 2021 ஆம் ஆண்டு ''தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளுக்கான விதிமுறைகள்'' வாய்ப்பளித்துள்ளன. இதனை தேர்வுக்கு முன்னரே பார்த்து சரிபார்த்துக் கொள்ளவும் விதிகள் அனுமதிக்கின்றன. ஆனால், இதற்கான எந்த உரிய ஏற்பாட்டையும், வாய்ப்பையும் ஆசிரியர் தேர்வு வாரியம் செய்யவில்லை என புகார்கள் வருகின்றன.
மாற்றுத்திறன் தேர்வர்கள் பாதிப்பு: மொத்தத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான உரிய வாய்ப்புகளை வழங்க வேண்டுமென்ற சட்ட விதிகளுக்கு முரணாக தகுதித்தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துவது கண்டிக்கத்தக்கது. பல ஆண்டுகளாக கடும் சிரமங்களோடு தயாராகி வரும் பார்வைத்திறன் பாதித்த உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகளை இந்த நடைமுறைகள் கடுமையாக பாதிக்கும். ஏமாற்றத்தையும், மன உளைச்சலையும் அளிக்கும்.
இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு இன்று அனுப்பப்பட்டுள்ள மனுவில் மாற்றுத்திறன் தேர்வர்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் சிரமங்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வசிப்பிடங்களில் இருந்து தொலைதூர மாவட்டங்களில் மையங்கள் நிச்சயிக்கப்பட்டுள்ளன. அவர்கள் உரிய முறையில் தேர்வுகளை எழுத முடியாதபடி தேர்வு வாரியம் கடும் சிரமங்களை கொடுத்துள்ளது. தடைகளை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, ஏற்பட்டுள்ள சிரமங்களையும், மன உளைச்சளையும் போக்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறன் தேர்வர்களுக்கு மட்டுமாவது தேர்வுகளை ஒத்தி வைத்து, உரிய வாய்ப்புகளை வழங்கும் நடைமுறைகளுடன் தகுதித்தேர்வுகளை விரைவில் நடத்த தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டுமென தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத்திக் கோருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT