Published : 10 Feb 2022 01:38 PM
Last Updated : 10 Feb 2022 01:38 PM

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கின்ற ஒரே கட்சி திமுகதான்: எடப்பாடி பழனிசாமி

கோப்புப்படம்

சேலம்: முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கின்ற ஒரே கட்சி திமுகதான் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்த தேர்தல் பிரச்சாரக் கூடத்தில் பேசிய அவர், "நாங்கள் ஆட்சிக்கு வந்தால், முதல்வர் ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்ய முதல் கையெழுத்தை போடுவார் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார். செய்ய வேண்டியது தானே, யார் யார் மேலோ குற்றம்சுமத்திக் கொண்டிருக்கிறீர்களே, இந்த நீட் தேர்வு வருவதற்கு காரணமே காங்கிரசும், திமுகவும் தான்.

ஏனென்றால் கிராமப்புற மக்களுக்கு நிறைய பேருக்குத் தெரியாது. 2010 டிசம்பர் 21, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தது. அப்போது திமுக அந்த ஆட்சியில் கூட்டணியில் இடம்பெற்றிருந்தது. அப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குலாம் நபி ஆசாத், மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். அதில் இணை அமைச்சராக இருந்தவர், திமுகவைச் சேர்ந்த நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் காந்திச்செல்வன். அப்போதுதான் நீட் தேர்வையே கொண்டு வந்தார்கள். ஆனால் இது அனைத்தையுமே திமுகவினர் மறைக்கின்றனர். மக்களிடம் எதுவுமே தெரியாதது போல பேசிக் கொண்டுள்ளனர். இவ்வளவு பெரிய பொய்யை யாராலும் பேச முடியாது. முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கின்ற ஒரே கட்சி திமுகதான். இத்தனையும் செய்துவிட்டு உத்தமபுத்திரன் மாதிரி பேசிக் கொண்டுள்ளனர்.

அனிதாவிலிருந்து இன்றைக்கு பல பேர் இறந்துவிட்டார்கள், அதற்கு யார் காரணம் திமுகவும், காங்கிரசும்தான் காரணம், அதிமுக இல்லை. நீட் தேர்வை ரத்து செய்வதற்காக அதிமுக கடுமையாக போராடிக் கொண்டிருந்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தபோதும் போராடினோம், நாமும் போராடினோம். 2013-ல், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று, தீர்ப்பளித்தனர்.

அதோடு விட்டிருந்தால், இந்த நீட் தேர்வு பிரச்சினையே இருந்திருக்காது. ஆனால், அன்றைய ஆட்சியாளர்கள், திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில், அந்த காலக்கட்டத்தில், மறு சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அன்றைக்கே அவ்வாறு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டாம் என்றும், மாணவர்கள் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறினார். ஆனால், இதனை காங்கிரசும், திமுகவும் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படி தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனு நீட் தேர்வு வர காரணமாக அமைந்துவிட்டது" என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x