Published : 10 Feb 2022 01:37 PM
Last Updated : 10 Feb 2022 01:37 PM
சென்னை: நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் இந்தியில் பதில் அளிப்பதா? என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால், மத்திய அமைச்சர்கள் இந்தியில் பதில் அளிப்பது - வேற்றுமையில் ஒற்றுமையைக் குலைக்கும் - ஒருமைப்பாட்டையும் சிதறடிக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தைச்சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், ''அமைச்சர் பதில் அளிப்பது ஆங்கிலத்தில் இருந்தால்தான் தமக்குப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்'' என்று கேட்டபொழுது, மூத்த அமைச்சரான பியூஸ் கோயல், பிடிவாதத்துடன், ''தம்மால் இந்தியில்தான் பதிலளிக்க முடியும்; காதில் மாட்டும் ஹெட்போனில் மொழி பெயர்ப்பு வரும், அதைக் கேட்டுப் புரிந்துகொள்ளட்டும் உறுப்பினர்'' என்று பதில் அளித்துள்ளார். இதில் குறுக்கிட்ட பேரவைத் தலைவர் ஓம் பிர்லா அவர்களும், ''அமைச்சரின் பதிலை, மொழி பெயர்ப்பின்மூலம் தெரிந்து கொள்ளுங்கள்'' என்றுதான் கூறியுள்ளார்! உறுப்பினர் ஆங்கிலத்தில் கேட்பதால், அமைச்சர் அந்த மொழியில் கூறிட என்ன தயக்கம் என்று மேலும், பேரவைத் தலைவரிடம் கேட்டபொழுது, அதற்கும் மேற்கண்ட பதிலையே அவர் கூறியுள்ளார்!
இதுபோலவே, சில நாள்களுக்கு முன்பு, விமானங்கள் - விமான நிலையங்களை தனியாருக்கு விடுவதுபற்றி திமுக உறுப்பினர் தயாநிதிமாறன், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராவ் சிந்தியாவிடம் கேட்ட கேள்விக்கு, அவர் இந்தி மொழியில் பதிலளித்துள்ளார்; உறுப்பினர், தான் புரிந்துகொள்ள வசதியாக, ஆங்கிலம் தெரிந்தவரானதால், ஆங்கிலத்தில் பதில் அளிக்கலாமே என்று கூறியபோதும்கூட, தான் இந்தியில்தான் பதில் அளிப்பேன்; இந்தியில் பதிலளித்தால் என்ன தவறு? என்று திருப்பிக் கேட்டு, இந்தி பேசாத மாநில உறுப்பினர்களை வருத்தத்திற்கும், வேதனைக்கும் ஆளாக்கியுள்ளார்!
மக்களவைத் தலைவரின் மொழி வெறி மனப்பான்மை: மக்களவைத் தலைவரிடம் முறையிட்டால், அவரோ உறுப்பினர்களின் உணர்வைப் புரிந்து, அனைவரையும் அரவணைத்துச் செல்லாது அமைச்சர் சொன்னதையே உறுதிப்படுத்திக் கூறியுள்ளார்.
மொழி உணர்வு என்பது எவராலும் அலட்சியம் செய்யப்படக் கூடாத ஒன்று; மேலும் கேள்வி கேட்டு பதிலைப் பெறுவது தகவல்களுக்காகத்தானே. கேட்டவருக்கு, அவருக்குப் புரியும் மொழியில் - ஆங்கிலத்தில் பதிலளித்தால் என்ன குடியா முழுகிவிடும்?
வேற்றுமையில் ஒற்றுமை என்பது இதுதானா?: மக்களாட்சி நடைபெறும் இந்திய நாட்டின் பன்மொழி கலாச்சாரம் உள்ள நாட்டில், பல பகுதி உறுப்பினர்களையும் திருப்தி செய்து, வேற்றுமையில் ஒற்றுமை என்பதை நாட்டை ஆளும் கட்சி கடைப்பிடித்து அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இது நம்முடைய ஆட்சி என்கிற உணர்வை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, மாற்று உணர்வை - கசப்பு உணர்வை - எதிர்ப்புணர்ச்சியை உருவாக்கிடுவது எவ்வகையில் நியாயம்? இதுபோன்ற வெறுப்பு அரசியல் பாஜகவுக்கு உடன் பிறந்த நோயே!
மொழி உணர்வு மக்களின் ரத்தத்தில் உறைந்த உணர்வு.
ஆங்கிலேயர்களுக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே மொழியில் ஏற்பட்ட பகைமை உணர்வு இன்றுவரை: மிக நீண்ட காலமாக அண்டை நாடுகளாக இருந்தபோதும், ஆங்கிலேயர்களுக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் மொழிப் பிரச்சினையால் ஏற்பட்டுள்ள உணர்வு - அடிப்படைக் கசப்பு இன்னும்கூட அந்த மக்களிடம் பெரிதும் மாறவில்லையே! பாரீசில் இங்கிலாந்தின் மொழியான ஆங்கிலத்தில் வழிகேட்டால், பதிலளிக்கவே மாட்டார்கள் - ஆங்கிலம் தெரிந்தவராக இருந்தாலும்கூட. இதை உணர்ந்துதான், ஜனநாயகத்தில் சிறந்த மலர் என்று போற்றப்படும் சுவிட்சர்லாந்து நான்கு மொழிகளை அங்கீகரித்துள்ளது.
சிங்கப்பூர் - மலேயாவைப் பாரீர்: அவ்வளவுதூரம் போவானேன்? சிங்கப்பூரில் - மலாய் மொழி, சீன மொழி, தமிழ், ஆங்கிலம் என நான்கு மொழி மக்களையும் மகிழ்ச்சியோடு வைக்க, காலை தொலைக்காட்சிப் பெட்டியில் வணக்கம் கூறுவதிலிருந்து - வணிகப் பொருள்கள் விலைப் பட்டியலிலும் நான்கு மொழிகளிலும் வில்லை (லேபிள்) ஒட்டப்படுகிறதே. மக்களின் உணர்வுக்கு மதிப்பளிப்பதுதான் உண்மையான மக்கள் ஆட்சி. மக்கள் தந்த அதிகாரத்தை, தங்களது மொழி ஏகாதிபத்தியத்தை நிலைநாட்டப் பயன்படுத்தினால், அது நாட்டின் ஒருமைப்பாட்டை சிதைக்கத் தூண்டுமே தவிர, மக்களை ஒன்றுபடுத்தாது; ஒற்றுமையில் வேற்றுமையை உருவாக்கிடவே வித்தூன்றும். அதிகார வெறி - மக்களாட்சியின் மாண்புக்கு எதிரானதும்கூட.
இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT