Published : 10 Feb 2022 12:39 PM
Last Updated : 10 Feb 2022 12:39 PM
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிய அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பிற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூட்டமைப்பிற்கான கட்சி பிரதிநிதியையும் மதிமுக இன்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் இட ஒதுக்கீடு உள்ளிட்ட நலன்களைப் பாதுகாத்திட, அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பு தொடங்கப்படும் என்று தமிழக முதல்வரும் - திமுக தலைவருமான மு. க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த அமைப்பில் இணைந்திட முன்வருமாறு 37 கட்சிகளின் தலைவர்களுக்கு, கடிதம் வாயிலாக அவர் அழைப்பு விடுத்துள்ளார் .
இந்த வரிசையில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு அழைப்பு விடுத்து மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.
இதை ஏற்று, அனைத்திந்திய சமூக நீதிக் கூட்டமைப்பின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரதிநிதியாக, கழகத்தின் தேர்தல் பணிச் செயலாளர் வழக்கறிஞர் ஆவடி அந்தரிதாஸ் செயல்படுவார் என அறிவித்து, முதல்வரின் முயற்சிகளுக்கு வரவேற்பையும், வாழ்த்தையும் தெரிவித்து பொதுச்செயலாளர் அவர்கள் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஆவடி அந்தரிதாஸ் பற்றிய குறிப்புகள்: வழக்கறிஞர் ஆவடி அந்தரிதாஸ், மதிமுகக தேர்தல் பணிச் செயலாளர், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி மாநிலத் தலைவர், திருவள்ளூர் மாவட்டக் கழக துணைச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இடம் பெற்றுள்ளார். தொலைக்காட்சி விவாதங்களில் கழகத்தின் பிரதிநிதியாக கலந்துகொண்டு சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார். தொழிற்சங்க தேர்தலில் வெற்றி பெற்று, நிர்வாக பொறுப்பில் பணியாற்றி வருகிறார். 1996, 2001, 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களிலும், 1996, 2011 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஆவடி நகர்மன்ற தேர்தல்களிலும் கழகத்தின் சார்பில் போட்டியிட்டார். 15க்கும் மேற்பட்ட பொதுநல சங்கங்களில் சட்ட ஆலோசகராகவும் இவர் பொறுப்பு வகிக்கிறார்.
இவ்வாறு மதிமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT