Published : 10 Feb 2022 06:09 AM
Last Updated : 10 Feb 2022 06:09 AM
சென்னை: நாட்டின் கூட்டாட்சி தத்துவம், பன்முகத் தன்மையை மாற்றும் முயற்சியில் மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறோம் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த சசிகாந்த் செந்தில், கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றினார். 2019-ம் ஆண்டில் தனது பதவியைராஜினாமா செய்தார். பின்னர், மத்திய பாஜகஅரசின் வெறுப்பு அரசியலுக்கு எதிராக ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்ததாக அவர் விளக்கம் அளித்தார். பிறகு, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதையடுத்து,தமிழ்நாடு காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக கடந்த ஆண்டு அவர் நியமிக்கப்பட்டார். குறிப்பாக, சமூக ஊடகம், முன்னணி அமைப்புகள்மற்றும் துறைகள், பயிற்சி முகாம் நடத்துவதுகுறித்த பணிகளைக் கவனித்து வருகிறார்.
மேலும், தமிழகம் முழுவதும் கடந்த சிலமாதங்களாக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை அவர் நேரில் சந்தித்து, காங்கிரஸ் கட்சியின் கருத்தியல் சிந்தனைகளை எடுத்துரைத்து வருகிறார். இதுதொடர்பாக அவர் ‘இந்து தமிழ் திசை’யிடம் கூறியதாவது:
அரசு பணிக்கும், கட்சி பணிக்கும் இடையே யான அனுபவம் எப்படி இருக்கிறது?
இரண்டுமே வித்தியாசமான அனுபவம்தான். அரசு அதிகாரியாக இருக்கும்போது அரசு அளிக்கும் பணிகளை மட்டுமே கவனிக்கமுடியும். ஆனால், இப்போது எல்லா கருத்துகளையும் வெளிப்படையாகத் தெரிவிக்கலாம். மேலும், மக்களை நேரடியாக சந்திக்க முடியும்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் முன்னணி தலைவர்கள் தனித்தனியாக செயல்படுவது... கருத்துகளை தெரிவிப்பது கட்சியின் ஒற்று மையை பாதிக்காதா?
காங்கிரஸ் கட்சி ஒரு ஜனநாயகக் கட்சியாக இருக்கிறது. மகாத்மா காந்தி, முன்னாள்பிரதமர் நேருவுக்கு இல்லாத கருத்து மோதலா? ஆனால், காங்கிரஸ் கட்சியின்கருத்தியல் சிந்தனைகளிலும், மக்களுக்கான பிரச்சினைகளிலும் ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகின்றனர். தமிழகத்திலும் நாங்கள் ஜனநாயகக் கட்சியாக இருக்கிறோம்.
நீட் விவகாரத்தில் காங்கிரஸ் நிலைப்பாடு?
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென்பதே எங்களின் நிலைப்பாடு. அதற்காக, தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைக்கும் காங்கிரஸ் துணையாக இருந்து செயல்படும்.
தேர்தல் நேரங்களில் மட்டும் காங்கிரஸ் கட்சி சுறுசுறுப்பாக இருக்கிறது. மற்ற நேரங்களில்கட்சியின் செயல்பாடுகள் சிறப்பாக இல்லை என்ற விமர்சனத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழகத்தில் தொடர்ந்து மக்கள் பிரச்சினைக்கு கவனம் செலுத்தும் வகையில் பல்வேறு கொள்கைகளை வகுத்து, செயல்பட்டு வருகிறோம். வரும் மார்ச் மாதத்தில் நடை பெறும் உட்கட்சி தேர்தலுக்குப் பிறகு இந்த நிலை மாறும்.
சமூக ஊடகங்களில் காங்கிரஸ் பங்களிப்பு குறைவாக இருக்கிறதே?
சமூக ஊடகங்களைத் தாண்டி மக்களிடம் நேரடியாகச் சென்று காங்கிரஸ் கட்சியின் கொள்கையை எடுத்துரைத்து அதன்மூலம் கட்சியை பலப்படுத்துவதில் ஆர்வம் காட்டிவருகிறோம். இந்தப் பணிகள் முடிந்தவுடன்சமூக ஊடகங்களிலும் எங்களது பங் களிப்பை மேம்படுத்தவுள்ளோம்.
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து 55 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. கூட்டணியை நம்பியே காங்கிரஸ் இருக்கிறதே?
மக்கள் பிரச்சினைகளை காங்கிரஸ் கையில் எடுக்கத் தவறியது ஒரு காரணமாக இருக்கலாம். தற்போது மத்திய பாஜக அரசு,நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை, பன்முகத்தன்மையை, அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
தமிழகத்தில் மாவட்டங்கள் தோறும் சிறப்பு முகாம்கள் அமைத்து, காங்கிரஸ் கட்சிநிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து காங்கிரஸ் ஆட்சி கால சாதனைகள் என்ன? மக்களுக்கு காங்கிரஸ் கட்சி ஏன் தேவைப்படுகிறது? அரசியலமைப்புச் சட்டம், பன்முகத்தன்மை, சமூகநீதியை உருவாக்கிய வரலாற்றை எடுத்துக் கூறி கட்சியை அனைத்து இடங்களில் பலப்படுத்தி வருகிறோம். புதிய தாக 8 லட்சத்துக்கும் மேற்பட்டோரை கட்சியில்சேர்த்துள்ளோம். வரும் சில மாதங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT