Published : 10 Feb 2022 06:24 AM
Last Updated : 10 Feb 2022 06:24 AM
திருப்பூரில் தோல் உரியும் விநோத நோயால் அவதிப்பட்டு வரும் 8 வயது சிறுவனின் சிகிச்சைக்கு தமிழக அரசு உதவவேண்டும் என சிறுவனின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் அருகே உள்ள கருவம்பாளையம் வெங்கடாசலபுரம் வீதியை சேர்ந்தவர் பிரேம்குமார். தையல் தொழிலாளி. இவரதுமனைவி ஜெயசித்ரா. தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவரது மகன் பொன்குமரன் (8) அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். பிறந்தது முதலே இவருக்கு உடலில் தோல் உரிந்தபடியே இருந்துள்ளது. இதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டும், எந்த பயனும் இல்லாததால், பெற்றோர் கவலையில் உள்ளனர்.
இதுதொடர்பாக ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் சிறுவனின் பெற்றோர் கூறியதாவது:
எனது மகன் பொன்குமரன் பிறக்கும்போதே, தோல் நோயால் பாதிக்கப்பட்டார். பாம்புபோல அவர் உடலில் இருந்து தோல் உரிந்து கொண்டே உள்ளது.
திருப்பூர், கோவை, ஈரோடு உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த அரசு மற்றும் தனியார் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. தோல் உரிவதால், ஆதார் உள்ளிட்ட ஆவணங்களுக்கு ரேகையைக்கூட எடுக்க முடியவில்லை. திருப்பூர் ஆட்சியரிடம் முறையிட்ட பிறகே,கண்ணின் கருவிழியை கொண்டு ஆதார் எடுக்கப்பட்டது. அதன்பிறகு தாமதமாகவே கருவம்பாளையம் அரசுப் பள்ளியில் சேர்த்தோம். மகனுடன் தொடர்ந்து ஒருவர் இருக்க வேண்டியிருப்பதால், மனைவி வேலைக்கு செல்வதில்லை.
வீட்டுவாடகை, மாதந்தோறும் மருத்துவச் செலவு, குடும்பச் செலவு என பெரும்தொகை செலவாகிறது. எனது மகனுக்கு உரிய சிகிச்சை கிடைக்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT