Published : 10 Feb 2022 05:30 AM
Last Updated : 10 Feb 2022 05:30 AM
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு நேற்று சென்ற அமைச்சர் எ.வ.வேலு பிரச்சாரம் செய்யாமல் சென்றதால் திமுக வேட்பாளர்களுக்கு ஏமாற் றமே மிஞ்சியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 நகராட்சிகள், 5 பேரூராட்சிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துமாவட்டப் பொறுப்பு அமைச்சரானஎ.வ.வேலு நேற்று (பிப்.9) வாக்குசேகரிப்பில் ஈடுபடுவார் என கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்கள் அறிவித்திருந்தனர்.
அதன்படி வேட்பாளர்கள் தத்தம் வார்டுகளில் கூட்டத்தை சேர்த்து காத்திருந்தனர். முதற்கட்டமாக நேற்று உளுந்தூர்பேட்டையில் வேட்பாளர்களை அமைச்சர் எ.வ.வேலு சந்தித்தார். வேட்பாளர்களிடம், ‘வார்டு எப்படி, எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிப்பீர்கள்’ என்று கேட்டு விட்டு,அங்கிருந்து புறப்பட்டு தியாகதுருகம், கள்ளக்குறிச்சி என பகுதி வாரியாக சென்றார். அவருடன் கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக வடக்கு, தெற்கு மாவட்டச் செயலாளர்கள் உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திக்கேயனையும் அழைத்து சென்றார். பின்னர் கள்ளக்குறிச்சி 1-வது வார்டில் தேர்தல் பணிக்குழு அலுவலகத்திற்கு சென்றார். அங்கு வேட்பாளரிடம் எவ்வளவு வாக்குகள் உள்ளது. யார், யார் போட்டி, வெற்றி வித்தியாசம் எவ்வளவு வரும் எனக் கேட்டார். பின்னர் அங்கிருந்தும் கிளம்பினார்.
இதனால் சலிப்படைந்த வேட்பாளர்கள், “காலை 9 மணியிலிருந்து வாக்காளர்களை நிற்க வைத்துக் காத்துக் கொண்டிருந்தோம். ஆனால் அவர் வந்ததோ மதியம் 1.30 மணிக்கு. அப்படி வந்தவர் ஒரு வாக்காளரிடமும் வாக்கு சேகரிக்காமல் சென்றுவிட்டாரே! இதற்கு அவர் வராமல் இருந்திருந்தால், இந்நேரம் வாக்காளர்களையாவது சந்தித்து வாக்கு சேகரித்திருக்கலாமே” என புலம்பித் தீர்த்தனர்.
அப்போது அமைச்சருடன் வந்திருந்த கட்சிப் பிரமுகர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, "தேர்தலில் அவர் வந்து தான் வாக்கு சேகரிக்க வேண்டும் என்ற நிலை இல்லை. ஒவ்வொரு வார்டின் நிலை எப்படி, வேட்பாளர் எந்த தொனியில் இருக்கிறார். எவ்வளவு செலவு பிடிக்கும் என்பதை நாடிபிடித்து பார்க்கத் தான் வந்தார். இதை நாங்கள் பட்டவர்த்தனமாகவா சொல்ல முடியும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT