Published : 10 Feb 2022 05:58 AM
Last Updated : 10 Feb 2022 05:58 AM

கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் விதவிதமான முறைகளில் வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்கள்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது. இத் தேர்தலில் திமுக, அதிமுக இடையே பிரதான போட்டியாக இருந்தாலும் பாஜக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், பாமக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் கம்பீரமாக வலம் வருகின்றன.

ஆளும்கட்சியான திமுக அமைச்சர்களின் ஆதரவோடும், எதிர்க்கட்சியான அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஆதரவோடும், அதே போல் பிறக்கட்சிகளின் வேட்பாளர்கள் கட்சி நிர்வாகிகளின் துணையோடும் வாக்குசேகரித்து வருகின்றனர்.

திமுக வேட்பாளர்கள் டீ கடையில் டீ ஆற்றுவது, கரும்பு ஜூஸ் கடையில் ஜூஸ் பிழியும் இயந்திரத்தை இயக்கி ஜூஸ் கொடுப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வாக்கு சேகரிக்கின்றனர்.

அந்த வகையில் கடலூர் மாநகராட்சி 13-வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பா ளர் எஸ்.பி நடராஜன் இரு தினங்களுக்கு முன்பு வாக்கு சேகரிக்கச் சென்றார். அப்போது இஸ்திரி போடும் நபர் ஒருவர் தனது கடையில் ஆடைகளுக்கு இஸ்திரி செய்து கொண்டு இருந்தார்.

இதையடுத்து வேட்பாளர் நடராஜன் அவரது கடையில் ஆடைகளுக்கு இஸ்திரி செய்து கொண்டே வாக்குசேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

கள்ளக்குறிச்சி நகரம் மரச் சிற்ப கலைக்கான புவிசார் குறியீடு பெற்ற நகரம் என்பதால் அப்பகுதியில் சுமார் 700 மரச் சிற்ப கலைஞர்கள் உள்ளனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி நகராட்சியில் 17-வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஞானவேல், நேற்று முன்தினம் வாக்கு சேகரிப்பின் போது, அண்ணாநகரில் மரச் சிற்ப தொழில் கூடத்திற்கு சென்று மரச் சிற்பங்களை செதுக்கி அவர்களிடம் வாக்கு சேகரித்தார்.

அதேபோன்று கள்ளக்குறிச்சி நகராட்சி 1-வது வார்டில் போட்டியிடும் ரமேஷ் என்பவர் வாக்காளர்கள் காலில் விழுந்து வாக்கு சேகரித்து அப்பகுதி வாக்காளர்களை திகைப்படையச் செய்ததார். வாக்காளர்கள் பதறி போய், ‘நீங்கள் எழுந்து நில்லுங்கள்!' என்றனர்.

விருத்தாசலம் 19-வது வார்டில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஞானசேகர், சாலையோரம் இளநீர் விற்பவரிடம் வாக்கு சேகரிக்கும் விதமாக, இளநீர் வெட்டிக் கொடுத்தார். அதை அங்கிருந்த டீ கடைக்காரர் பெற்றுக் கொண்டார். இதில் வேடிக்கை என்னவென்றால், ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த அந்த இளநீர் விற்பனையாளருக்கு நகர்ப்புற தேர்தலில் வாக்கு கிடையாது.

வாக்குப்பதிவிற்கு இன்னும் 9 தினங்களே உள்ள நிலையில் இன்னும் என்னென்ன விதமான முறைகளில் வாக்குசேகரிப்பு நடைபெறுமோ என வாக்காளர்கள் நகைச் சுவையாக முணுமுணுத்துக் கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x