Last Updated : 09 Feb, 2022 05:00 PM

1  

Published : 09 Feb 2022 05:00 PM
Last Updated : 09 Feb 2022 05:00 PM

சனி, கேது விலகிச் சென்றதால் அதிமுக வெற்றி பெறும்: முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ’கணிப்பு’

படம்: ஜி.ஞானவேல்முருகன்

திருச்சி: "சனி, கேது போன்ற வேண்டாத கிரகங்கள் விலகிச் சென்றுள்ளதால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்" என திருச்சியில் நடைபெற்ற அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகக் கூட்டம் ஸ்ரீரங்கம், காட்டூர் ஆகிய இடங்களில் இன்று நடைபெற்றது. ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக வேட்பாளர்களை முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிமுகப் படுத்திவைத்து பேசியது: "நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புத் தேர்தலில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத வெற்றியை அதிமுக பெறவுள்ளது. ஏனெனில், பொங்கல் பரிசுத் தொகுப்பு உட்பட பல்வேறு விவகாரங்களில் ஆளுங்கட்சியை அனைத்துத் தரப்பு மக்களும் விமர்சனம் செய்யும் நிலையில் தேர்தல் நடைபெறுகிறது.

அதேபோல், வழக்கமாக ஜாதகம் பார்க்கும்போது சனி, கேது என வேண்டாத கிரகங்கள் இருப்பதாக ஜோதிடர் கூறுவார். தற்போது அந்த வேண்டாத கிரகங்கள் எல்லாம் நம்மை பிரிந்த பிறகு, சுதந்திரமாக, நல்ல சகுணத்தில் தேர்தலைச் சந்திக்கிறோம். இது, இன்னொரு வகையில் அதிமுகவுக்கு வெற்றியாகும்.

நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் அதிமுகவின் கொள்கை. நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களுக்கு சரியான தெளிவை ஏற்படுத்த திமுக அரசு முன்வர வேண்டும். சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் கேட்க நினைத்த 2 கேள்விகளை இங்கு கேட்கிறேன். இந்தியாவில் நீட் தேர்வின் அடிப்படையில்தான் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்ட நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை நீதிமன்றம் ஏற்கவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் அரசு என்ன செய்யப் போகிறது?.

ஏற்கெனவே அனுப்பிய நீட் விலக்கு தீர்மானத்தை குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பிவிட்டார். இப்போது ஆளுநர் திருப்பி அனுப்பியதையடுத்து, மீண்டும் நிறைவேற்றிய அனுப்பிய தீர்மானத்தை ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பும்பட்சத்தில் அதை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொள்வாரா என்று முதல்வர் ஸ்டாலின் பதில் கூற வேண்டும்" என்று அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி, முன்னாள் அமைச்சர்கள் கிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், வளர்மதி மற்றும் அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x