Published : 09 Feb 2022 09:32 AM
Last Updated : 09 Feb 2022 09:32 AM

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக நெல், கோதுமை உமி உள்ளிட்ட வேளாண் கழிவுகளில் தேநீர் கோப்பைகள் தயாரிப்பு: உதகையில் அசத்தும் இளைஞர்கள்

உதகை

சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மாவட்டம், பிளாஸ்டிக் ஒழிப்பில் முன்னோடியாக விளங்குகிறது. நீலகிரி மலையின் இயற்கை எழில் மற்றும் வன விலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் டம்ளர், தட்டு உள்ளிட்ட 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு லிட்டருக்கும் குறைவான கொள்ளளவில் பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யப்படும் குடிநீர், குளிர்பானங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, சூழலியலுக்கு தீங்கு விளைவிக்காத மக்கும் பொருட்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை பயன்படுத்துமாறு உள்ளூர் மக்களையும், சுற்றுலா பயணிகளையும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது. இருப்பினும், பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக ஒழிக்க முடியாத நிலை நீடிக்கிறது.

இந்நிலையில், உதகையைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக நெல் உமி, கோதுமை உமி, கரும்புச் சக்கை, வேர்க்கடலை ஓடுகள், தேங்காய் நார், வாழைத்தண்டு, புளியங்கொட்டை உள்ளிட்ட வேளாண்மை சார்ந்த கழிவுகளைக் கொண்டு, தேநீர் கோப்பைகள், கரண்டிகள், தட்டுகள், உணவுப் பொருட்களை பார்சல் செய்ய பயன்படும் கன்டெய்னர்கள் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து வருகின்றனர். இவற்றை நீலகிரி மாவட்டத்தில் புழக்கத்தில் விட்டு பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிரான முன்னெடுப்பில் அசத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக, வேளாண் கழிவுகளிலிருந்து பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் இயக்குநர் ஆர்.செந்தில்குமார் கூறும்போது, "சுற்றுச்சூழல் பாது காப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமான நீலகிரியில், பல்வேறு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மாற்று பயன்பாட்டு பொருட்களுக்கு தேவை அதிகமாக இருக்கிறது. இதனைக்கருத்தில் கொண்டே வேளாண் சார்ந்த கழிவுகள் மூலமாக கோப்பைகள், தட்டுகள் உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.

வேளாண் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் இந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டு, தூக்கி எறிந்த 24 மணி நேரத்துக்குள் மக்கும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன.

இவற்றை கால்நடைகள் உட்கொண்டாலும், அவற்றுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. வேளாண்கழிவுகளும் மிகக் குறைந்த விலையில் கிடைப்பதால், கொள்முதல் செலவும் பெரிய அளவில் ஏற்படுவதில்லை. ஒரு கோப்பை ரூ.1-க்கு விற்பனை செய்கிறோம்.

உதகையிலுள்ள சில உணவகங்கள், சிறு வணிக நிறுவனங்கள் இவற்றை வாங்க ஆர்வம் காட்டிவருகின்றனர். மாவட்ட நிர்வாகத்திடம் எங்கள் தயாரிப்புகளை காண்பித்து அங்கீகாரம் பெற முயற்சித்து வருகிறோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x