Published : 08 Feb 2022 07:00 PM
Last Updated : 08 Feb 2022 07:00 PM
கும்பகோணம்: கும்பகோணத்தில் உள்ள 6 சிவாலயங்களில் மாசிமக திருவிழா இன்று காலை (8-ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்கியது.
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர், காசி விஸ்வநாதர், காளஹஸ்தீஸ்வரர், அபிமுகேஸ்வரர், வியாழசோமேஸ்வரர், கவுதமேஸ்வரர் ஆகிய 6 சிவன் கோயில்களில் மாசிமக பெருந்திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோயில்களில் விழா பந்தல் அமைக்கப்பட்டு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு பூர்வாங்க பூஜைகள் நடத்தப்பட்டு இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டது.
பின்னர் அனைத்து சுவாமி - அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றது. பஞ்சமூர்த்தி சுவாமிகள் சிறப்பு மலர் அலங்காரத்தில் கொடி மரம் முன் எழுந்தருளினர். அப்போது வேத பாராயணம், திருமுறைகள், சிறப்பு நாதஸ்வரம் முழங்க விழா கொடியேற்றினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாசி மகத் திருவிழாவின் முதன்மையான கோயிலாக கருதப்படும் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் கொடியேற்றத்தின் போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இன்றிறிரவு அதிகும்பேஸ்வரர் கோயிலில் 10 நாதஸ்வர, மேள கலைஞர்களின் இன்னிசை முழக்கத்துடன் பஞ்சமூர்த்தி சுவாமிகள் இந்திர விமானத்தில் வீதியுலா புறப்பாடு நடைபெறவுள்ளது.
விழாவின் சிறப்பம்சமாக வரும் 11-ம் தேதி கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலிலிருந்து 63 நாயன்மார்கள் வீதியுலாவும், 12-ம் தேதி ஓலைச்சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும். 15-ம் தேதி காலை தேரோட்டம் நடைபெறவுள்ளது. 16-ம் தேதி மாலை அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், காசி விஸ்வநாதர், வியாழ சோமேஸ்வரர் ஆகிய 4 கோயில்களில் தேரோட்டம் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் பிப்.17-ம் தேதி மகாமகம் குளத்தில் மதியம் 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் மாசிமக தீர்த்தவாரி வைபவம் நடைபெறுகிறது. அப்போது குளத்தின் நான்கு கரைகளிலும் பக்தர்கள் புனித நீராட உள்ளனர். அந்த நேரத்தில் 12 சிவாலயங்களில் இருந்து பஞ்சமூர்த்தி சுவாமிகள் வீதியுலாவாக புறப்பட்டு மகாமக குளத்தின் கரைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தவாரி அருளுகின்றனர்.
பெருமாள் கோயில்களில் நாளை கொடியேற்றம்:
கும்பகோணம் ஆதிவராக பெருமாள், சக்கரபாணி சுவாமி, ராஜகோபால சுவாமி கோயில்களில் நாளை (9-ம் தேதி) காலை மாசிமக பெருந்திருவிழாவை முன்னிட்டு விழா கொடியேற்றப்படுகிறது. வரும் 12-ம் தேதி கருட வாகனங்களில் ஓலைச்சப்பரமும், பிப்.17-ம் தேதி மாசிமகத்தன்று காலையில் சக்கரபாணி கோயில் தேரோட்டமும், அதே நாளில் சாரங்கபாணி பெருமாள் பொற்றாமரை குளத்தில் தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். அந்தந்த கோயில் நிர்வாகத்தினர், உபயதாரர்கள் விழா ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT