Published : 08 Feb 2022 05:02 PM
Last Updated : 08 Feb 2022 05:02 PM
திருப்பத்தூர்: திருப்பத்துார் அருகே 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்காலக் கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் மோகன்காந்தி, ஆசிரியர் அருணாசலம் அடங்கிய ஆய்வுக்குழுவினர் பல்வேறு இடங்களில் வரலாற்றுத் தடயங்கள் குறித்த கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில், பழங்கற்காலக் கருவிகள், கற்கோடரிகள், நடுகற்கள் உள்ளிட்ட பலவற்றைக் கண்டறிந்து அதை ஆவணப்படுத்தியும் வருகின்றனர்.
அந்த வகையில், திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலையில் சமீபத்தில் நடத்திய கள ஆய்வில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்காலக் கருவிகளை ஆய்வுக்குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து மோகன்காந்தி கூறும்போது, ''திருப்பத்துார் மாவட்டம், ஜவ்வாதுமலைக்கு உட்பட்ட புதூர் நாடு ஊராட்சியில் வழுதலம்பட்டு என்ற சிற்றூர் அமைந்துள்ளது. இந்த ஊரைச் சேர்ந்த முருகேசன் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் வேப்பமரத்தடியில் கருநிறத்தில் வழவழப்பான 10க்கும் மேற்பட்ட பழங்காலக் கற்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்று ஆய்வு செய்தோம்.
அதில், 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஆதி மனிதர்கள் வேட்டையாடப் பயன்படுத்திய கற்காலக் கருவிகள் இருப்பது தெரியவந்தது. மேலும், ஜவ்வாதுமலையில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனித குடியேற்றம் இருந்ததை இதன் மூலம் அறிய முடிகிறது.
இந்தக் கற்கோடரிகளை இப்பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் 'பிள்ளையாரப்பன்' என்ற பெயரைச் சூட்டி அதை தெய்வமாக நினைத்து வழிப்பட்டு வருகின்றனர். இந்த பிள்ளையாரப்பனுக்கு மிகப்பெரிய சக்தி இருப்பதாக இங்கு வசிக்கும் மலைவாழ் மக்கள் நம்புகின்றனர்.
தங்களின் காட்டு வழிப்பயணத்தின் போது இங்குள்ள பிள்ளையாரப்பன் வழித்துணையாக இருந்து வருவதாக இப்பகுதி மக்கள் நம்புகின்றனர். இது தவிர விவசாய நிலங்களில் ஏரோட்டும் போதும், நீர் நிலைகளுக்கு அருகாமையிலும் கிடைக்கும் கற்கோடரிகளைக் கொண்டு வந்து ஓரிடத்தில் குவித்து வைக்கின்றனர்.
இந்தக் கற்கோடரிகள் இரும்பால் செய்யப்படுகின்ற கோடரியைப் போல அடிப்பகுதி அகன்றும், கூர்மையாகவும் காணப்படுகிறது. இதன் நுனிப்பகுதி கைப்பிடிப்போலக் காட்சி தரும் எனவே இதற்குக் கற்கோடரி என அக்காலங்களில் பெயரிடப்பட்டன. வழுதலம்பட்டு ஊர் நடுவில் சாலையோரத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட கற்கோடரிகள் வழிபாட்டில் உள்ளன. இவை 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்கால கருவிகளாக இருக்கக்கூடும்.
வழுதலம்பட்டை அடுத்துள்ள சாமி பாறையின் உச்சியில் மூன்று கற்கோடரிகள் உள்ளன. இதே பகுதியில் பெருமாள் பாதம் என்ற இடத்தின் அருகாமையிலும் மூன்று கற்கோடரிகள் உள்ளன. இவை அனைத்தும் ஜவ்வாதுமலையின் தொன்மையைப் பறைசாற்றும் ஆவணங்களாக இருப்பதால் இந்த கற்காலக் கருவிகளை தொல்லியல் துறையினர் ஆவணப்படுத்தி பாதுகாக்க வேண்டும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT