Published : 08 Feb 2022 01:41 PM
Last Updated : 08 Feb 2022 01:41 PM

நீட்... இது தேர்வு அல்ல, மாணவர்களின் உயிர் பறிக்கும் பலிபீடம்: பேரவையில் முதல்வர் ஸ்டாலின் காட்டம்

சென்னை: ”பல மாணவர்களை கல்லறைக்கும், சில மாணவர்களை சிறைக்கும் அனுப்பியுள்ளது நீட் தேர்வு. இது தேர்வல்ல மாணவர்களின் உயிர் பறிக்கும் பலிபீடம்” என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

நீட் விலக்கு மசோதா தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்தச் சிறப்புக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்: "தமிழ்நாடு சட்டப்பேரவையின் இறையாண்மையை, உரிமையைக் காப்பதற்காகவும் நாம் இன்று கூடியிருக்கிறோம். கூட்டாட்சி தத்துவம் காப்பற்றப்படுவதற்காக நாம் இன்று கூடியிருக்கிறோம். நான் 16 வயதில் அரசியல் களத்தில் நுழைந்தேன். என்னுடைய பொது வாழ்கையில் மறக்க முடியாத நாளாக இந்த நாள் அமைந்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 % இடஒதுக்கீடு உள்ளிட்ட இடஒதுக்கீடு செயல்படுத்தப்படுகிறது.

நீட் தேர்வுக்கு எதிராக இந்தியா முழுவதும் 118 வழக்குகள் போடப்பட்டுள்ளன. தமிழகம்தான் முதலில் வழக்குப் போட்டது. கடந்த 2010-ஆம் ஆண்டு நீட் தேர்வு முன் மொழியப்பட்டபோதே, தலைவர் கருணாநிதி அதனைக் கடுமையாக எதிர்த்தார். நீட் தேர்வு முறை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நீட் தேர்வு என்பது தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு சாதகமானதுதான். ஏழை, எளிய மாணவர்களின் கனவுக்கு ஒரு தடுப்புச் சுவர். நீ மருத்துவராக வேண்டாம் என்று ஒருசிலரை மட்டும் நீட் தேர்வு தடுக்கிறது. பயிற்சி மையங்களில் சேர்ந்து மீண்டும் மீண்டும் தேர்வு எழுதுபவர்களுக்குத்தான் இந்தத் தேர்வு பயனுள்ளதாக இருக்கிறது. அவ்வளவு பணம் கொடுத்து பயிற்சி பெற முடியாதவர்கள் உள்ளார்கள். அவர்களுக்குத்தான் நாம் நீட் விலக்கு கேட்கிறோம்.

நீட் தேர்வுக்கு முன் 90% இடங்களை மாநில பாடத்திட்ட மாணவர்கள் பெற்றுவந்தனர். தகுதி என்ற போர்வையில் உள்ள நீட் தேர்வு என்ற அறிவுத் தீண்டாமையை நாம் அகற்ற வேண்டாமா? நீட் தேர்வு என்பது பணக்கார நீதியை பேசுகிறது; அரசியலமைப்பு என்பதே சட்டத்தின் நீதியப் பேசுகிறது. அரசியலமைப்புச்சட்டம் கூறக்கூடிய சமத்துவத்திற்கு எதிரானது நீட் தேர்வு.

அதனை எதிர்த்து நிறைவேற்றப்ப்பட்ட மசோதாவை ஆளுநர் திருப்பியனுப்பியுள்ளார். இதன்மூலம் சட்டப்பேரவையின் இறையாண்மை கேள்விக்குறியாகியுள்ளது. சட்டப்பேரவையின் தீர்மானத்தை ஆளுநர் நிறுத்திவைக்க முடியுமென்றால் இந்திய மாநிலங்களின் கதி என்ன?

நியமன பதவியில் இருக்கும் ஆளுநர் மசோதாவை மதிக்காமல் திருப்பி அனுப்பியது மக்களாட்சிக்கு எதிரானது. ஆளுநர் என்பவர் அமைச்சரவைக்கு கட்டுப்பட்டே நடந்துகொள்ள வேண்டும்.

நீட் தேர்வால் முறைகேடுகள்தான் அதிகரித்துள்ளது. 2019-ஆம் ஆண்டு 4 பேரும், 2020 ஆம் ஆண்டு 5 பேரும் நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு 15 பேர் முறைகேட்டில் ஈடுபட்டதாக மக்களவையில் மத்திய அரசே கூறியுள்ளது. இது தொடர்பாக தற்போது வரை 12 வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல மாணவர்களை கல்லறைக்கும், சில மாணவர்களை சிறைக்கும் அனுப்பியுள்ளது நீட் தேர்வு. இது தேர்வல்ல மாணவர்களின் உயிர் பறிக்கும் பலிபீடம்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

முன்னதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தாக்கல் செய்த மசோதா மீது அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் தங்களின் கருத்தை முன்வைத்துப் பேசினர். இறுதியாக முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். முதல்வரின் உரைக்குப் பின்னர் குரல் வாக்கெடுப்பின் மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதா நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்தார். அத்துடன் அவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாகக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x