Published : 08 Feb 2022 12:01 PM
Last Updated : 08 Feb 2022 12:01 PM

’மாநிலங்களுக்கு ஆளுநர் தேவையில்லை’ என்ற இயக்கத்தை ஸ்டாலின் முன்னெடுக்க வேண்டும்: பேரவையில் ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

சென்னை: "மாநில உரிமைகளைக் காக்க, மாநிலங்களுக்கு ஆளுநர் தேவையில்லை என்ற இயக்கத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னெடுக்க வேண்டும்" என்று சட்டப்பேரவையில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா பேசுகையில், "ஆளுநரின் கடிதத்தை படித்து மிகுந்த வேதனையில் உள்ளேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வு தேவையில்லை என்று நிறைவேற்றி அனுப்பிய மசோதாவை மத்திய அரசால் அனுப்பப்பட்ட ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். இதனை உணர்ந்துதான் அன்றே அண்ணா, ’ஆட்டுக்குத் தாடி தேவையில்லை. மாநிலங்களுக்கு ஆளுநர் தேவையில்லை’ என்று கூறினார்.

சமூக நீதியைக் காக்க சமூக நீதிக் கூட்டமைப்பை முதல்வர் உருவாக்கியுள்ளார். அதை வரவேற்கிறோம். அதேபோல், மாநிலங்களுக்கு ஆளுநர் தேவையில்லை என்ற இயக்கத்தை முதல்வர் முன்னெடுக்க வேண்டும். அது மாநிலங்களின் பிரச்சினைக்குத் தீர்வாக அமையும். நீதிபதி ஏ.கே.ராஜன் அறிக்கையை காமாலைப் பார்வையின் அறிக்கை என்று ஆளுநர் கூறியிருப்பது தமிழக மக்களை அவமதிக்கும் செயல். ஆளுநர் தனது கடிதத்தில் தனது தனிப்பட்ட கருத்துகளைத் திணித்திருக்கிறார்" என்றார்.

தொடர்ந்து பேசிய கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஈஸ்வரன், "தமிழக சட்டப்பேரவை இருமுறை நீட் எதிர்ப்பு மசோதாவை இயற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளது. இன்று மீண்டும் அந்த மசோதாவை நிறைவேற்றக் கூடியுள்ளோம். இது தமிழக முதல்வரின் தனிப்பட்ட விருப்பம் அல்ல. நீட் தேர்வில் தமிழக அரசுக்கு விலக்குக் கோரி பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது. ஆனால், தமிழக ஆளுநர் தனது தனிப்பட்ட கருத்துகளை சுட்டிக்காட்டி தாமே முடிவெடுத்து மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார்.

ஆளுநரின் கடிதம் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது. அவர்கள் மருத்துவர்களானால் நல்ல மருத்துவர்களாக இருக்க மாட்டார்கள் என்பது போன்ற உள் அர்த்தம் ஆளுநரின் கடிதத்தில் உள்ளது. மாநில உரிமைகளைப் பறிக்கும் விதமாக மத்திய அரசு நடந்து கொண்டிருக்கிறது. மாநில உரிமைக்காகப் போராடும் தமிழக முதல்வரின் முன்னெடுப்புகளை நாங்கள் வரவேற்கிறோம். அரசுப் பள்ளி மாணவர்கள் 7.5% இடஒதுக்கீட்டில் பலனடைகிறார்கள்" என்று கூறினார்.

முன்னதாக, நீட் விலக்கு கோரும் சட்ட முன்வடிவை மீண்டும் நிறைவேற்றுவதற்காக தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று கூடியது. அதில் முதலில் சட்டப்பேரவை சபாநாயகர் ஆளுநரின் கடிதத்தை விளக்கி உரையாற்றினார். பின்னர், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது அவர், ஆளுநரின் செயல் தமிழக அரசு அமைத்த ஏ.கே.ராஜன் குழுவை அவமதிக்கும் செயல் என்றும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி மசோதாவை நிராகரித்திருப்பது அடிப்படை அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் கூறினார். தொடர்ந்து பல்வேறு கட்சி உறுப்பினர்களும் தங்களின் கருத்துகளை முன்வைத்தனர்.

மதிமுகவைச் சேர்ந்த எம்எல்ஏ சதன் திருமலைக்குமார் பேசுகையில், "தமிழக அரசு நிறைவேற்றிய நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல், திருப்பியனுப்பியுள்ளார். மாநில அரசின் உரிமைகளுக்கு மதிப்பளித்து ஆளுநர் தனது கடமையை நிறைவேற்ற வேண்டும். மாறாக அதை திருப்பியனுப்பி ஆளுநர் கூறியிருக்கும் காரணங்கள் ஏற்புடையது அல்ல. அரியலூர் அனிதா அதிக மதிப்பெண் பெற்றிருந்தும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் போனதற்கு நீட் தேர்வு காரணம். அனிதா போல் 17 மாணவர்கள் நீட் தேர்வால் இன்னுயிர் இழந்தனர். இதனால் தான் நீட் தேர்வை எதிர்த்து தமிழக அரசு சட்டமசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால் அதை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். அரசியலமைப்பின் சட்டத்தின்படி ஆளுநரின் அதிகாரம் வரம்புகளுக்கு உட்பட்டதுதான். ஆளுநர், அமைச்சரவையின் உதவியுடனும் ஆலோசனையின்படியே செயல்பட வேண்டும் என்று நீதிமன்றங்கள் பல வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது. இதனை ஆளுநர் உணர்ந்திருக்க வேண்டும். மருத்துவம் என்பது சமூக நீதி சம்மந்தப்பட்டது. நாட்டில் குடியரசுத் தலைவருக்குக் கிடைக்கும் மருத்துவ வசதி கிடைக்கிறதோ அது கடைக்கோடி குடிமகனுக்கும் கிடைக்க வேண்டும். அதனை உறுதிப்படுத்த அரசு கொண்டுவந்துள்ள தீர்மானத்தை மதிமுக வரவேற்கிறது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x