Published : 07 Feb 2022 10:13 PM
Last Updated : 07 Feb 2022 10:13 PM

விழுப்புரம்: பேருந்தில் தவறவிட்ட குழந்தை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைப்பு

விழுப்புரம்: சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு நேற்று முன் தினம் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. விழுப்புரம் மாவட்டம் ‌மணக்காணம் அருகே ‌பேருந்து சென்று கொண்டிருந்தபோது அந்த பேருந்தில் பயணித்த பெண் ஒருவரிடம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் 3 மாத குழந்தையை வைத்திருக்குமாறு கூறியுள்ளார். அப்பெண் குழந்தையை வாங்கிய சிறிது நேரத்தில் குழந்தையை கொடுத்த நபர் பேருந்திலிருந்து இறங்கி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.

இத்தகவல் அறிந்த கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸார் அந்த பெண்ணிடம் இருந்த மூன்று மாத ஆண் குழந்தையை மீட்டு விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த விமலா- கவியரசு, தம்பதியின் மூன்று மாத குழந்தை தான் அந்த குழந்தை என்பது தெரியவந்தது. பின்னர் அவர்களை நேற்று நேரில் வரவழைத்து விசாரித்தனர். விசாரணையில் கவியரசு மட்டும் குழந்தையை தூக்கிக்கொண்டு பேருந்தில் வந்தபோது, குழந்தை அந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டு பேருந்திலிருந்து கீழே இறங்கி இயற்கை உபாதை கழிக்க சென்றாராம்.‌ அப்போது பேருந்து புறப்பட்டு சென்றுவிட்டதாக தெரிவித்தாராம்.

இருப்பினும், குழந்தை தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்து பிறகே குழந்தையின் பெற்றோரிடம் ஒப்படைக்க முடியும் என போலீஸார் தெரிவித்தனர். இதனிடையே பேருந்தில் இருந்து மீட்கப்பட்ட அந்த குழந்தையை விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் போலீஸார் ஒப்படைத்தனர். அங்கு அக்குழந்தை பராமரிக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x