Published : 07 Feb 2022 12:38 PM
Last Updated : 07 Feb 2022 12:38 PM
சென்னை: "பொய் சொல்வதற்கே சிலர் கொஞ்சமும் கூச்சப்படாதபோது, உண்மையைப் பேசுவதற்கு நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள்?" என்று திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகளை ஒட்டி திமுக தொண்டர்கள் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்:
”நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
நல்லாட்சி வழங்கி வரும் திமுக அரசின் திட்டங்கள் உள்ளாட்சிவரை படிநிலைகளின் வழியே ஊடுருவிச் சென்று, ஒவ்வொரு ஊரிலும், அதில் உள்ள ஒவ்வொரு தெருவிலும், அங்கே வாழ்ந்துவரும் ஒவ்வொரு குடும்பத்திலும், அந்தக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் பயன்பெற்று மகிழ்ந்திட வேண்டும் என்ற உன்னத நோக்கமே, நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களத்தில் நமக்கான இலக்காகும்.
திமுக வேட்பாளர்களும், தோழமைக் கட்சி வேட்பாளர்களும், ஒவ்வொரு வாக்காளரையும் தவறாமல் நேரில் சந்தித்து, வேண்டுகோள் விடுத்து, தங்கள் வெற்றியை உறுதிசெய்யும் விளக்கப் பரப்புரையை மேற்கொள்கின்ற நேரம் இது.
வேட்பாளர்களையும், அவர்களுக்காக அரும்பாடுபடுகிற உடன்பிறப்புகளையும், வெற்றியை மனமுவந்து வாரி வழங்கவிருக்கிற வாக்காளர்களையும், உங்களுடன் இணைந்து நானும் நேரில் சந்திக்கவே பெரிதும் விரும்புகிறேன். முதல்வர் என்ற பொறுப்பை இதே வாக்காளர்கள்தான் கடந்த ஆண்டு மே மாதம் என்னை நம்பி, உளப்பூர்வமாக ஒப்படைத்தார்கள். அவர்கள் வைத்த நம்பிக்கை, ஒரு நாளும் ஒரு சிறிதும் வீணாகாதபடி, ஒட்டுமொத்த ஆற்றலையும் பயன்படுத்தி தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன். நிறைவேற்ற வேண்டிய பணிகள் நிறைய உள்ளன.
கரோனா இரண்டாவது அலையிலிருந்து மக்களைக் கண்ணை இமை காப்பது போல் காத்த நமது அரசு, மூன்றாவது அலையையும் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது. அது மேலும் பரவாமல் இருப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளைக் காக்க வேண்டிய கடமை முதல்வர் என்ற பொறுப்பில் உள்ள எனக்குக் கூடுதலாகவே இருக்கிறது.
திமுகவினர் தெருமுனைக் கூட்டங்களை நடத்தினால் பொதுக்கூட்டம் போலவும், பொதுக்கூட்டங்களை நடத்தினால் மாநாடு போலவும், உடன்பிறப்புகள் திரள்வதுடன், பொதுமக்களும் பெருமளவில் உற்சாகத்துடன் நம்முடைய கூட்டங்களில் பங்கேற்கிறார்கள். இளைஞர்களும், பெண்களும் கட்சியின் மீது திடமான நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்களும் ஆர்வத்துடன் வருகின்றனர்.
தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள அளவைக் கடந்த பிரச்சாரக் கூட்டங்களில் நான் பங்கேற்றால், அது கரோனா காலக் கட்டுப்பாடுகளுக்கு மாறானதாக அமைந்துவிடும்.
எந்தவொரு ஆக்கப்பூர்வமான - பொறுப்பான விமர்சனத்தையும் முன்வைக்க முடியாத எதிர்க்கட்சியினர், ஈரைப் பேனாக்கி இட்டுக் கட்டும் வேலையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். வெறும் வாயையே மென்று சுகம் காணும் அவர்களுக்கு, வெல்லமும் அவலும் கலந்து வாயில் போட்டது போலாகிவிடும் என்பதே என் எண்ணம்.
விமர்சனங்களை நேரடியாக எதிர்கொள்ள எப்போதும் நான் தயங்கியதில்லை. உங்களில் ஒருவனான என் மீது, சட்டமன்றத் தேர்தல் களத்திலும், அதற்கு முன்பும், என்னென்ன விமர்சனங்களை வைத்தார்கள் என்பதை உடன்பிறப்புகளாகிய நீங்கள் நன்றாகவே அறிவீர்கள்.
அவர்களின் விமர்சனங்களுக்கு, நம்முடைய சீரிய செயல்பாடுகளால், செம்மையான பதிலடி தர வேண்டும் என்பதில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன். அதனால், நேரடிப் பரப்புரை நிகழ்ச்சிகளைத் தவிர்த்து, காணொலிப் பரப்புரைக் கூட்டங்கள் வாயிலாக, உடன்பிறப்புகள் மற்றும் வாக்காளர்களின் ஒளிமுகம் கண்டு, அகம் மிக மகிழ்கிறேன்.
பிப்ரவரி 5-ஆம் நாளன்று கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் திமுக நிர்வாகிகளுடன் காணொலி வாயிலாகக் கலந்துரையாடல் கூட்டத்தை, அந்த அணியின் செயலாளர் ஆற்றல்மிகு அருமைத் தம்பி டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ., அழகுற ஒருங்கிணைத்திருந்தார். அந்த நிகழ்வில் நான் எடுத்துரைத்த கருத்துரைகளை உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் என மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
“மலையளவு பொய்யாக இருந்தாலும், அதை உடைக்க உண்மை ஒன்றே போதும். காற்றேற்றப்பட்ட பலூன், கண்ணுக்குத் தெரியாத குண்டூசி குத்தினாலே, உருத் தெரியாமல் சிதறிவிடும் அல்லவா! நீங்கள் உண்மைகளை மக்களிடம், உரிய வகையில் எடுத்துச் சொன்னாலே போதும். எதிரணியினர் நம்மை கோபப்படுத்துவார்கள்; ஆத்திரப்படுத்துவார்கள். அதற்கு நாம் எதிர்வினையாற்ற வேண்டும் என்பதுதான் அவர்கள் எதிர்பார்ப்பது! அவர்கள் போல நாம், தரம் தாழ்ந்து, நிலை தடுமாறி, நடந்து கொள்ளவும் முடியாது. வெறும் கரண்டி பிடித்துள்ளவன், கையை எப்படி வேண்டுமானாலும் சுழற்றலாம். ஆனால், எண்ணெய் கரண்டியை கையில் வைத்துள்ள நாம் அந்த மாதிரி சுழற்ற முடியாது; மீறிச் சுழற்றினால், எண்ணெய் கீழே கொட்டிவிடும். ஆட்சியில், வெகுமக்கள் வழங்கிய அதிகாரத்தில் நாம் இருப்பதால், அவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு, கீழே இறங்கி தெருச்சண்டை போடவும் முடியாது; லாவணி பாடவும் முடியாது. இதை நீங்கள் எப்போதும் மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
சாதியைச் சொல்லித் திட்டுவார்கள்; மதத்தை வைத்து இழிவு படுத்துவார்கள். பெண்களாக இருந்தால் ஆபாசமாகப் பேசுவார்கள். நமது குடும்பத்தை குறைத்துரைப்பார்கள். அதுதான் அவர்கள் பின்பற்றும் அரைகுறைப் பண்பாடு. ‘வாழ்க வசவாளர்கள்’ என்கிற நமது வழக்கமான அடிப்படையில்தான், நாம் நிச்சயம் செயல்படவேண்டும். இதுதான் நம் பண்பாடு, பார் போற்றும் நம் குணம்.
பதில் சொல்கிறோம் என்று நினைத்துக் கொண்டு, புதுப் பிரச்சினையை உருவாக்கிவிடக் கூடாது. எடுத்துரைப்பதற்கு நம்மிடம் ஏராளமான சாதனைகள் இருக்கின்றன. பெருமையோடுப் பேசுவதற்கு நம்மிடம் பீடுடைய வரலாறு இருக்கிறது. நாடும், ஏடும் போற்றும் நமது முன்னோடியான தலைவர்கள், அரிய ஆளுமைகள் - லட்சிய வேட்கை மிக்கவர்கள் - அதற்காகப் பல வகையிலும் தியாகங்களைச் செய்தவர்கள். இதைத் தக்கபடி எடுத்துச் சொன்னாலே போதும். எக்காரணம் கொண்டும் தேவையில்லாததைச் சொல்ல வேண்டாம்.
தொலைக்காட்சி ஊடகங்கள், இணையதளங்கள், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றின் வரிசையில் அதிகப்படியான மக்களால் பார்க்கப்படுவதும், படிக்கப்படுவதும், பகிரப்படுவதும் வாட்ஸ்அப் செய்திகள்தான். புதிய புதிய வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்குங்கள். சாதாரண மக்கள் பார்வையிடும் குடும்ப வாட்ஸ்அப் குழுக்கள், பொதுவான குழுக்கள் ஆகியவற்றில் நமது செய்திகளைக் கச்சிதமாகப் பகிருங்கள். பொய் சொல்வதற்கே சிலர் கொஞ்சமும் கூச்சப்படாதபோது, உண்மையைப் பேசுவதற்கு நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள்? அந்தத் தயக்கத்தைத் தகர்த்தெறிந்து, உண்மையான செய்திகளை உரக்கச் சொல்லி எல்லாருக்கும் கொண்டு சேர்ப்போம்” என்பதை தகவல் தொழில்நுட்ப அணி சார்பிலான காணொலிக் கூட்டத்தில் வலியுறுத்தினேன்.
வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்புவோரின் வாய்ஜாலச்சதியினை முறியடித்து, நம் சாதனையைப் பரப்புவோம். சாதனைகளால் நிரம்பிய வாட்ஸ்அப் செய்திகள் நூறாக, ஆயிரமாக, லட்சங்களாகப் பகிரப்படும்போது அது வெறும் வாட்ஸ்அப் செய்தியன்று. திமுகவிற்கு ஆதரவு பெருக்கிடும் வாக்குகளுக்கான அச்சாரம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களத்தில் வாக்கு சேகரிக்கும் பணியில் இருக்கும் ஒவ்வொரு உடன்பிறப்பும், இதனை கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.
திராவிட இயக்கம், தனது லட்சியங்களை மக்களின் மனதில் பதிய வைப்பதற்காக திண்ணைப் பரப்புரை, தெருமுனைக் கூட்டம், துண்டறிக்கை, பத்திரிகை, படிப்பகம், நாடகம், திரைப்படம், தொலைக்காட்சி விளம்பரம் எனக் காலத்திற்கேற்ற - கண்ணையும் கருத்தையும் கவரும் வடிவங்களை வெற்றிகரமாக கையாண்ட இயக்கம். இன்றைய அறிவியல் - தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, தனிநபர் ஊடகங்களாக விளங்கும் சமூக வலைத்தளங்களையும் இணைய வழி நிகழ்வுகளையும், நெறி பிறழ்ந்திடாது, முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு பரப்புரை செய்திடல் வேண்டும். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை, ஒன்று விடாமல் கவனமாகப் பின்பற்றிட வேண்டும்.
சட்டமன்றத் தேர்தலின்போது, ‘தமிழகம் மீட்போம்’ எனத் தொடர்ச்சியாகக் காணொலிக் கூட்டங்களை நடத்தியபோது, ஒவ்வொரு மாவட்டத்திற்கான கூட்டத்திலும் அந்தந்த மாவட்டக் கழக அலுவலகத்தில் மட்டுமின்றி, நகரக் கழக அலுவலகங்கள், ஒன்றியக் கழக அலுவலகங்கள், பேரூர்க் கழகங்கள், கிளைக் கழகங்கள் எனப் பல ஊர்களின் உடன்பிறப்புகளும் அவரவருக்கு வசதியான இடத்தில் ஒன்றுகூடி, காணொலிக் கூட்டத்தை கண்டும் கேட்டும் ஊக்கமடைந்தனர். நேரடிப் பிரச்சாரங்களுக்கு சற்றும் குறைவில்லாத வகையில் மேற்கொள்ளப்பட்ட காணொலிப் பிரச்சாரங்களால், தமிழகத்தைக் கழகம் மீட்டது. மக்கள் எதிர்பார்க்கும் நல்லாட்சியை வழங்கி வருகிறது.
‘உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி’ என்ற தலைப்பில், பிப்ரவரி 6-ஆம் நாள் தொடங்கிய காணொலிக் கூட்டம் ஒவ்வொரு மாவட்டத்தையும் உள்ளடக்கிய வகையில் பிப்ரவரி 17 வரை தொடர்கிறது. கழகத்தினரையும், பொதுமக்களையும், வாக்காளர்களையும், காணொலி வழியே கண்டு, களிப்புமிகக் கொண்டு, உரையாடிடும் உற்ற வாய்ப்பாகவே இதனைக் கருதுகிறேன். பொதுக்கூட்டங்களில் ஆயிரம் பேருக்கு மேல் கூடக்கூடாது என்கிற மாநில தேர்தல் ஆணையத்தின் நெறிமுறையைப் பின்பற்றி, பிப்ரவரி 6-ஆம் நாள் கோவை மாவட்டத்திற்கான காணொலிக் கூட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பினைப் பெற்றேன். அது கூட்டமல்ல, கழகத்தின் ‘மெய்நிகர் மாநாடு’.
கோவைக்குப் பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி அவர்களின் வியூகமும் வேகமும் மிகுந்த விரிவான முயற்சியாலும், கோவை மாவட்டத்தில் உள்ள கழக நிர்வாகிகளின் உத்வேக உழைப்புடன் கூடிய ஒத்துழைப்பாலும், 300 இடங்களில் இந்தக் காணொலிக் கூட்டத்தில் கழகத்தினரும் பொதுமக்களும் பங்கேற்றனர்.
ஒவ்வொரு இடத்திலும் ஆயிரம் பேருக்குக் குறையாமல் கூடியிருந்ததால், ஒரு காணொலி பரப்புரைக் கூட்டத்தின் வாயிலாக ஏறத்தாழ 3 லட்சம் பேருடன் உரையாடுகின்ற நிறைவான வாய்ப்பு அமைந்தது. நேரடியாகக் களத்திற்கு வந்தாலும்கூட, இத்தனை பேரை ஒன்றாகச் சந்தித்திருக்க முடியாது. இத்தனை பேரும் அவரவர் இடத்திலிருந்து பரப்புரைக் கூட்டம் நடத்தப்படும் இடத்திற்கு வந்திருக்க முடியாது.
‘தடைக் கற்கள் உண்டென்றாலும் தடந்தோள் உண்டு’ என்று புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பாடியதுபோல, இந்த கரோனா காலக் கட்டுப்பாடு எனும் தடைகளைக் கொஞ்சமும் மீறாமல், உணர்வுமிகு தடந்தோள் உயர்த்தி நம் பரப்புரைப் பயணம் தமிழ்நாடெங்கும் தொடர்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இலட்சக்கணக்கான மக்கள் அவரவர் ஊர்களிலிருந்தபடியே காணொலிக் கூட்டங்களில் பங்கேற்கிறார்கள். அவர்களிடம் அரசின் சாதனைகளை, நெஞ்சுயர்த்தி எடுத்துரைக்க முடிகிறது. எதிர்க்கட்சியினர் பரப்பும் பொய்களை சுக்கு நூறாக நொறுக்கிட முடிகிறது.
காணொலியில் முன்வைக்கும் கருத்துகளை அவரவர் வார்டுகளிலும், வீடு வீடாகச் சென்று, விளக்கமளித்து, வாக்குகளைச் சேகரியுங்கள். ஆட்சிக்கு வந்த எட்டு மாதங்களில், தி.மு.கழகம் முழுமையான அர்ப்பணிப்புடன், மக்கள் பணியே மகேசன் பணியெனக் கொண்டு, நாள்தோறும் உழைத்து வருவதைக் கண்டு உணர்ந்திருக்கும் மக்கள், ஒருபோதும் எதிர்க்கட்சியினரின் திட்டமிட்ட பொய்ப் பரப்புரை எனும் மாய வலையில் விழ மாட்டார்கள். நம் பக்கமே அவர்கள் நம்பிக்கையுடன் இருப்பார்கள். நாம் என்றும் அவர்கள் பக்கம் அக்கறையுடன் இருப்போம்.
ஆட்சி – அதிகாரம் - பதவி அனைத்தையுமே, சமூகநீதி எனும் சாலச் சிறந்த லட்சியத்தை நிறைவேற்றுவதற்குத் தக்க கருவியாகக் கருதுகிற இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். தேர்தல் களத்தில் பெறுகின்ற வெற்றியும்கூட, நம் லட்சியப் பாதைக்கான வெளிச்ச விளக்குகள்தான்.
கொள்கை வழிப் பயணத்தில் எத்தனை சவால்கள், சங்கடங்கள் குறுக்கிட்டாலும், காட்டாறுகளும் நெருப்பாறுகளும் மோதினாலும், அவற்றை அஞ்சாமல் எதிர்கொண்டு, அயராது பயணத்தைத் தொடர்ந்து வருகிறோம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களத்தில் கவனம் செலுத்துவதும்கூட, கொள்கைகளை நிறைவேற்றப் பயன்படும் பயணத்தின் ஒரு கட்டம்தான்.
அதில் கவனம் செலுத்துகிற அதே நேரத்தில், அதைவிடவும் கூடுதல் கவனத்துடன் பாடுபட்டு வளர்த்தெடுத்த சமூகநீதியை வெட்டிச் சாய்க்க வெறிகொண்டு துடிக்கும் நீட் எனும் கொடுவாளை ஏந்தியிருக்கும் எதேச்சாதிகாரத்தின் கரங்களை சட்டரீதியாக ஒடுக்குவதில் சமரசமற்ற அகிம்சைப் போரினைத் தொடங்கியுள்ளோம்.
பிப்ரவரி 8-ஆம் நாள் கூட்டப்படும் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தின் நோக்கமும், அதில் நிறைவேற இருக்கிற தீர்மானமும், கடைக்கோடித் தமிழ் மாணவருக்கு எட்டாக் கனியாக இருக்கும் மருத்துவக் கல்வி வாய்ப்பு கிட்ட வேண்டும் என்பதுதான்! அதனையும் கருத்தில் வைத்தே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான காணொலிப் பரப்புரைகளில் பங்கேற்கிறேன்.
தமிழ்நாட்டின் அனைத்து மக்களுக்குமான உரிமைகளை உறுதியாக நிலைநாட்டும் நமது லட்சியப் பயணத்தின் வெற்றி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் முழுமையாக அமைந்திட, உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் களப் பணியாற்றுங்கள்.
கழகத்தினருடனும் தோழமைக் கட்சியினருடனும் ஒருங்கிணைந்து உற்சாகமாகப் பணியாற்றுங்கள். மக்களிடம் செல்லுங்கள்; மகத்தான வெற்றியை அவர்கள் மனமுவந்து தருவார்கள்.
இவ்வாறு அக்கடித்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT