Published : 07 Feb 2022 10:39 AM
Last Updated : 07 Feb 2022 10:39 AM

கூடலூரை அடுத்த ஜீன்பூல் தாவர மையத்தில் அகர் மரங்களை காக்கும் முயற்சியில் வனத்துறை

கூடலூர்

கூடலூரை அடுத்த ஜீன்பூல் தாவர மையத்தில் விலை உயர்ந்த அகர் மரங்களை பாதுகாக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

உலகில் விலை உயர்ந்த அகர் (அகில்) மரங்கள், நாட்டின் வடகிழக்கு மாநிலங்களை பூர்வீகமாக கொண்டவை. ஆண்டுக்கு 150 முதல் 750 செ.மீ. மழை அளவுள்ள பகுதியில் வளரக் கூடியவை. விலை உயர்ந்தவாசனை திரவியம், எண்ணெய்,அகர் பத்தி உற்பத்தி செய்யப்பயன்படுத்தப்படுகிறது. ஒரு கிலோ மரம் ரூ.10 ஆயிரமும், இதன் எண்ணெய் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.ஒரு லட்சம் வரையும் விற்கப்படுகிறது.

குறிப்பாக, முதிர்ந்த மரத்தில் உருவாகும் பிசினில் வாசனை திரவியம் தயாரிப்பதால், உலக மார்க்கெட்டில் மிக அதிக விலை கிடைக்கிறது.

100 மரங்கள் இருக்கும் இடத்தில், 10 மரங்களில் மட்டும் பிசின் உற்பத்தியாகிறது. பல நாடுகளில், பணத்துக்காக வேகமாகஅழிக்கப்பட்டுள்ள இந்த மரம், இந்தியாவில் மழைக் காடுகளில் வளர்கின்றன. அதுவும் அழியும் நிலையில் உள்ளது என்று, பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த மரங்கள் நீலகிரி காடுகளில் கண்டறியப்பட்டு, கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கூடலூரை அடுத்த நாடுகாணி பகுதியிலுள்ள ஜீன்பூல் தாவர மையத்தில் இரண்டு மரங்களில், பூ பூத்து காய்கள் இருப்பதை வனத்துறையினர் கண்டறிந்துள்ளனர். இதனை, அதிகளவில் உற்பத்தி செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பாக ஜீன்பூல் தாவர மைய வனச்சரகர் பிரசாத் கூறும்போது, "முதிர்ந்த அகர் மரத்தை பூஞ்சை நோய் தாக்கும்போது, தன்னை பாதுகாக்க வெளியிடும் பிசின், ஒரு கிலோவுக்கு சர்வதேச சந்தையில் ரூ.1கோடிவரை விலை கிடைக்கிறது. இதன்மூலமாக வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படுகின்றன.

அதேபோல, மரத்தில் இருந்து கிடைக்கும் எண்ணெய், ஒரு கிலோவுக்கு அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை விலை கிடைக்கும். அழியும் நிலையில் உள்ள இந்த மரங்களில் இருந்து கிடைக்கும் காய்களின் மூலமாக விதைகளை எடுத்து, அதிகளவில் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x