Published : 07 Feb 2022 10:43 AM
Last Updated : 07 Feb 2022 10:43 AM
சட்டப்பேரவை தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என சேலத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சேலம் மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் 60 அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் அம்மாப்பேட்டையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பேசியதாவது:
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சேலம் அதிமுக கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும். அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டும்.
அதிமுக ஆட்சியில்தான் மாநிலத்துக்கு தேவையான பல நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் சேலம் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெற்றி பெறச் செய்தீர்கள். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் இந்த சாதனை படைக்க வேண்டும். அதிமுக கொண்டுவந்த திட்டங்கள் குறித்து மக்களிடம் விளக்கி வாக்குகள் சேகரிக்க வேண்டும்.
பொதுமக்கள் வைத்த அனைத்து கோரிக்கைகளும் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றி கொடுத்தோம். சேலம் மாநகராட்சியில் மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்தது அதிமுக அரசு என்பதை பொதுமக்களிடம் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்.
நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். இதுவரை ரத்தாகவில்லை. நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் அரசு. அதற்கு ஆதரவு அளித்தது திமுக. ஆனால், எங்களை குறை கூறி, எங்கள் மீது பழியைப் போட்டு தப்பிக்க பார்க்கிறார்கள்.
சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்த பிறகு திமுக அரசு நிறைவேற்றவில்லை. நகை கடன் தள்ளுபடி செய்யவில்லை. இப்போது கேட்டால் தகுதியானவர்களுக்கு மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கின்றனர். இவற்றை எல்லாம் பொதுமக்களிடம் எடுத்துச் சொல்லி வாக்குகளை சேகரிக்க வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தல் வெற்றி மூலம் மக்களோடு மக்களாக சேர்ந்து பணிபுரிய முடியும். இந்த அமைப்பு மூலம் அடிப்படை தேவைகள் செய்து தர முடியும். சேலம் மாநகராட்சியில் போட்டியிடும் 60 வேட்பாளர்களும் வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment