Published : 07 Feb 2022 09:50 AM
Last Updated : 07 Feb 2022 09:50 AM
மத்தியில் திமுக சுகாதாரத்துறை இணையமைச்சராக இருந்தபோது தான் நீட் கொண்டுவரப்பட்டது என்ற உண்மையை மறைப்பதேன் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:
நீட் தேர்வு தொடர்பாக திமுக அரசு உண்மைக்கு மாறான தகவல்களை பொதுமக்களிடம் அளித்து வருகிறது. அமைச்சர்கள் துரைமுரு கன், மா.சுப்ரமணியன் ஆகியோர் வெளியிட்டுள்ள தகவலின் படி, நீட் சட்டம் கொண்டு வந்ததற்கும், திமுகவுக்கும் ஏதோ சம்பந்தமே இல்லாததைப் போன்றும், அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு கொண்டு வந்தததைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் மக்களுக்கு உண்மையைக் கூறவேண்டிய கட்டாயத்தில் இருக்கி றோம்.
மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் குலாம்நபி ஆசாத் சுகாதாரத் துறை அமைச்சராகவும், திமுகவைச் சேர்ந்த காந்திசெல்வன் இணையமைச்சராகவும் செயல் பட்டனர். இந்நிலையில் 2010 டிசம்பர் 12-ம் தேதி நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக சில மாநிலங்கள் எதிர்ப் புத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இவ்வ ழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், 2013-ம் ஆண்டு நீட் தேர்வு நடை முறைப்படுத்துவது தொடர்பாக அரசாணையும் வெளியிட்டது அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு.
இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்து 3 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு 2013 ஜூலை 18-ம் தேதி தீர்ப்பளித்தது. ஆனால் அப்போதைய காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்தது. இதனால் 5 பேர் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு இவ்வழக்கை விசாரித்து, 2013-ம் ஆண்டு வெளியிட்ட நீட் தேர்வு தொடர்பாக அரசாணை செல்லும் எனக் கூறி 2014 ஏப்ரல் 11 அன்று தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து ஆட்சிக்கு வந்த பாஜக, சில மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று, நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு அளித்ததோடு, உச்ச நீதிமன்றத்திலும் கோரிக்கை வைத்தது. ஆனால் அவை ஏற்கப் படவில்லை.
உண்மை நிலை இப்படியிருக்க, பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகிறது திமுக. இன்று நீட் தேர்வு குறித்து நீட்டி முழங்கும் ராகுல்காந்தி, அன்று வாய்மூடி இருந்ததேன்.அப்போதைய காங்கிரஸ் அரசு , 2013-ல் அளித்த தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்தபோது, கூட்டணியில் இருந்த திமுக ஏன் அதை தடுக்கவில்லை? அமைச்சர்கள் துரைமுருகனும், மா.சுப்ரமணியனும் 2010 டிசம்பர் 12-க்கு பின் உள்ள கோப்புகளை படித்துவிட்டு பேசவேண்டும்.
இந்த நிலையில் தற்போது திமுக அரசு பொறுப்பேற்று நீட் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றியபோது, அதிமுகவும் ஆதரவு அளித்தது. அந்த தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பியிருக்கும் நிலையில், அதை ஆளுநர் முறையான காரணங்களைக் கூறி பட்டியலிட்டு திருப்பி அனுப்பியுள்ளார். அதில் முக்கியமான இரு காரணங்களைக் கூறியுள்ளார். மாணவர்களை வைத்து திமுக அரசியல் செய் கிறது. நீட் தேர்வு வரலாற்றை மாணவர்களும், பெற்றோர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT